எச்1பி விசா: இந்தியர்களுக்கான நேர்காணல் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு

1 mins read
5e59ed7f-ed5f-42ea-8cb1-d1112c1d3779
வெளிநாட்டவர்களால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: அமெரிக்காவில் தங்கி பணி புரியவும் கல்வி பயில்வதற்குமான எச்1பி விசாவுக்கு விண்ணப்பித்துள்ள இந்தியர்களுக்கான நேர்காணலை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டவர்களால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இதனால், அமெரிக்காவிற்குக் குடிபெயர விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான கட்டுப்பாடுகளை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடுமையாக்கினார்.

அந்த வகையில், எச்1பி விசாவுக்கான கட்டணத்தை 89 லட்சம் ரூபாயாக அதிகரித்தது அமெரிக்கா. மேலும், அந்த விசாவுக்கு விண்ணப்பிப்போரின் சமூக ஊடகக் கணக்குகளை ஆய்வுக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், எச்1பி விசாவுக்கு விண்ணப்பித்தோரின் நேர்காணலை அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் முதல் டிசம்பர் இறுதிவரை நேர்காணலில் பங்கேற்க இருந்தவர்களுக்கு, 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் நேர்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகக் கணக்குகளை ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, 19 நாடுகளுக்கான விசா, நிரந்தரவாசம் உள்ளிட்ட விண்ணப்பங்களை அமெரிக்க நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்