ஓடி ஒளியும் ஹரியானா இளம் பாடகர்கள்: காவல்துறை கெடுபிடி

2 mins read
ab5abd1e-3b23-4abb-9fb8-072b4c0da719
ஹரியானா டிஜிபி ஓ.பி.சிங். - படம்: ஊடகம்

சண்டிகர்: பாடல்களாலும் சாகச காணொளிகள் வெளியிடுவதன் மூலமாகவும் இளையர்களை வன்முறைப் பாதைக்கு திருப்பும் பாடகர்களும்கூட குற்றவாளிகளாகத்தான் கருதப்பட வேண்டும் என்று ஹரியானா காவல்துறைத் தலைவர் டிஜிபி ஓ.பி. சிங் கூறியுள்ளார். அத்தகையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

ஹரியானா மாநிலக் காவல்துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், துப்பாக்கிக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வன்முறையை சாகசமாகவும், வெறுப்பைத் துாண்டும் விதமாகவும் சமூக வலைத்தளங்களில் சிலர் பாடல்கள், காணொளிகளை வெளியிடுவதாகச் சாடினார்.

“இது, பெற்றோரின் போதனை, ஆசிரியர் போதித்த கல்வி, சமூக ஒழுக்கம் ஆகியவற்றை இளையர்களிடம் இருந்து அழித்து விடுகிறது. மாறாக, இளையர்களை வன்முறைப் பாதைக்கு திருப்புகிறது.

“சமூகத்தை, இளையர்களை சீரழிக்கும் இந்தப் பாடகர்கள், குற்றவாளிகளாகத்தான் கருதப்பட வேண்டும்,” என்றார் டிஜிபி ஓபி சிங்.

இணையக் குற்றப்பிரிவினர் சமூக ஊடகங்களைக் கண்காணித்து, இதுபோன்ற பாடகர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதுபோன்ற சமூகத்தை சீரழிக்கும் பல பாடல்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

“கடந்த, 5ஆம் தேதி துவக்கப்பட்ட ‘ஆப்பரேஷன் டிராக் டவுன்’ வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

“இதுவரை, 1,439 பேர் தேடப்படும் குற்றவாளிகளும் குற்றம்சாட்டப்பட்ட 3,127 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான மற்றும் அதிரடியான இந்த நடவடிக்கையால், சட்டவிரோத நடவடிக்கைக்கு ஹரியானாவில் இடமில்லை என்பதை குற்றவாளிகளுக்குப் புரிய வைத்துள்ளது,” என்றார் திரு ஓபி சிங்.

குறிப்புச் சொற்கள்