கோல்கத்தா: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் கொட்டித் தீர்த்த பெருமழையால் 17 பேர் மாண்டனர். மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் முக்கிய சாலை இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இமாலய மாநிலமான சிக்கிம்மிற்கான பாதைகளைப் பேரிடர் துண்டித்துவிட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
டார்ஜிலிங்கில் நேற்றிரவு (அக்டோபர் 4) கனத்த மழை பெய்ததில் மீரிக், சுகியா பொக்காரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதையடுத்து காவல்துறை அதிகாரிகளும் உள்ளூர் அரசாங்கப் பிரிவுகளும் மீட்புப் பணிகளைத் தொடங்கின.
மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி திங்கட்கிழமை (அக்டோபர் 6) டார்ஜிலிங் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரிடரால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து ஆழ்ந்த வேதனைப்படுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். “பாதிக்கப்பட்டோருக்கு முடிந்த அனைத்து உதவிகளைச் செய்வதில் உறுதியாக இருக்கிறோம்,” என்று எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டார்.
நிலச்சரிவுகளால் டார்ஜிலிங்கையும் சிலிகுரியையும் இணைக்கும் சாலைகளும் துண்டிக்கப்பட்டன.
இந்தியாவில் இடம்பெற்ற துர்கை வழிபாட்டுக்குப் பின் கோல்கத்தாவுக்கும் வங்காள மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பெரிய அளவில் சுற்றுப்பயணிகள் படையெடுப்பது வழக்கம். எனவே பல சுற்றுப்பயணிகள் தற்போது டார்ஜிலிங்கில் சிக்கித் தவிப்பதாக நம்பப்படுகிறது.
அசம்பாவிதங்கள் நடப்பதைத் தவிர்க்க டார்ஜிலிங்கில் உள்ள டைகர் ஹில், ரோக் கார்டன் ஆகிய சுற்றுலாத் தலங்களையும் கோர்காலந்து வட்டார நிர்வாகம் மூடியது.
உள்ளூர்வாசிகளும் சுற்றுப்பயணிகளும் தொடர்ந்து விழிப்புடன் இருந்து சாலை நிலவரம் பற்றியும் வானிலை பற்றியும் வெளிவரும் தகவல்களை அறிந்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டர்.
பெருமழையால் ஏற்பட்ட சேதம் குறித்து டார்ஜிலிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜூ பிஸ்தா கவலை தெரிவித்தார். மரணங்கள் நேர்ந்தன, சொத்துகளும் உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
நிலவரம் குறித்த தகவல்களைத் திரட்டிவருவதாகவும் உரிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் எக்ஸ் தளத்தில் திரு பிஸ்தா கூறினார்.