கோயம்புத்தூர்: திரைப்படங்களில் வருவதைப் போல, தப்பியோடிய கடத்தல் கும்பலின் காரின் மேற்கூரையைப் பிடித்துக்கொண்டே 30 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, குற்றவாளிகளைத் துணிச்சலாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் பிடித்துள்ளார்.
செப்டம்பர் 27ஆம் தேதி அதிகாலை விளாங்குறிச்சி - களப்பட்டி இடையே உதவி ஆய்வாளர் வி. விக்னேஷ், தலைமைக் காவலர் வேல்முருகன் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரிலிருந்து வந்த கர்நாடகப் பதிவு எண் கொண்ட கார் ஒன்றை அவர்கள் மறித்தனர். காரின் பின்புறம் மூட்டைகள் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் சோதனையிட முயன்றபோது, காரிலிருந்தவர்கள் அதிகாரிகளைத் தள்ளிவிட்டு, கதவுகளை மூடிக்கொண்டு அதிவேகமாகத் தப்பிச் செல்ல முயன்றனர்.
காரை மறிக்க முயன்றபோது ஓட்டுநர் திடீரென காரை வேகப்படுத்தியதாகவும் காரின் கதவுப் பிடியில் தலைமைக் காவலர் வேல்முருகனின் கை சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அவர்களைத் தப்பவிடக் கூடாது என்ற உறுதியோடு, காரின் மேற்கூரை கம்பிகளைப் பிடித்திருந்த நிலையில் காரின்மீது ஏறிக்கொண்டதாகத் திரு வேல்முருகன் த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திப் பிரிவிடம் தெரிவித்தார்.
சாதாரண ஆடையில் இருந்த தலைமைக் காவலர் ஆபத்தான முறையில் கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டர் தூரம் காரின்மீது தொங்கியவாறு பயணித்ததைக் கண்ட சக வாகன ஓட்டிகள், அதைத் தங்களது கைப்பேசியில் பதிவு செய்தனர்.
காவல்துறையினர் காரைச் சுற்றி வளைத்ததால் கடத்தல் கும்பல் சரணடைந்தது.
அவர்களிடமிருந்து 170 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பிக்க முயன்ற கடத்தல்காரர்கள் இருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
