புதுடெல்லி: இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவில் வாடகை வீட்டுச் சந்தை பெருவளர்ச்சி கண்டுள்ளது.
2025 ஜனவரி-மார்ச் வரையிலான முதல் காலாண்டைக் காட்டிலும் ஏப்ரல்-ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில் வீட்டு வாடகை 4.8 விழுக்காடு கூடியுள்ளது. அதே நேரத்தில், 2024 இரண்டாம் காலாண்டைவிட 2025 இரண்டாம் காலாண்டில் வீட்டு வாடகை 29.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சொத்துச் சந்தை நிறுவனமான மேஜிக்பிரிக்ஸ் அண்மையில் வெளியிட்ட வாடகைக் குறியீட்டு அறிக்கையில் இந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.
காலாண்டு அடிப்படையில், வாடகை வீடுகளுக்கான தேவையும் வழங்கலும் 3% உயர்ந்துள்ளது. ஆக அதிகமாக, 2025 இரண்டாம் காலாண்டில் கிரேட்டர் நொய்டாவில் வாடகை வீடுகளுக்கான தேவை 20.7% கூடியது. அதனைத் தொடர்ந்து, டெல்லியில் 17.2% வளர்ச்சியும் அகமதாபாத்தில் 12.2% வளர்ச்சியும் பதிவாயின.
அதுபோல, வாடகை வீடுகளுக்கான வழங்கலிலும் கிரேட்டர் நொய்டாவே முதலிடத்தைப் பிடித்தது. அங்கு வாடகைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 12.6% அதிகரித்தது. 11.4 விழுக்காட்டுடன் சென்னை இரண்டாமிடத்தில் வந்தது.
இதனிடையே, பல்வேறு நகரங்களில் வீட்டு வாடகையும் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. ஆண்டு அடிப்படையில், நவி மும்பை (19.4%), கோல்கத்தா (13.7%), ஹைதராபாத் (11.5%), சென்னை (11.2%) ஆகிய நகரங்களில் வீட்டு வாடகை அதிகமாக உயர்ந்தது.
ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளுக்கான தேவை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்தபோதும், இரு படுக்கையறைகள் கொண்ட வீடுகளே அதிகமானோரின் விருப்பத் தெரிவாக இருந்தது. தேசிய அளவில் பார்க்கையில், வாடகைச் சந்தையில் இரு படுக்கையறை கொண்ட வீடுகளை 46 விழுக்காட்டினர் நாடினர்.
வீட்டுப் பரப்பளவைப் பொறுத்தமட்டில், 76 விழுக்காட்டினர் 500 முதல் 1,500 சதுர அடி கொண்ட வீடுகளில் கவனம் செலுத்தினர். அதுபோல, வீட்டு வாடகை ரூ.10,000 முதல் ரூ.20,000க்குள் இருக்க வேண்டும் என 36 விழுக்காட்டினர் விரும்பினர்.
தொடர்புடைய செய்திகள்
அகமதாபாத், சென்னை, ஹைதராபாத், நவி மும்பை ஆகிய நகரங்களில் வாடகை மூலம் வருமானம் ஈட்டப்படுவது 4.1 விழுக்காடு கூடியது.
“இது சந்தை உந்துவிசையை மட்டுமன்றி பண்பாட்டு மாற்றத்தையும் காட்டுகிறது. வாடகைதாரர்கள், குறிப்பாக இளைய பணியாளர்கள் நீக்குப்போக்கு, கட்டுப்படியாகும் தன்மை, வாழ்க்கைமுறை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்,” என்று மேஜிக்பிரிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுதிர் பய் கூறினார்.
இந்தியாவின் செலவுமிக்க வாடகைச் சந்தையாக மும்பை நீடிக்கிறது. கிரேட்டர் நொய்டா, அகமதாபாத், நொய்டா ஆகியவை கட்டுப்படியாகக்கூடிய வாடகைச் சந்தையாக உருவெடுத்துள்ளன.