சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்களின் கூட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் தற்போது மண்டல பூசை நடந்து வருகிறது. அதில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
வழக்கமாக, வார இறுதி நாள்களில்தான் அதிக பக்தர்கள் வருவார்கள். ஆனால், இவ்வாண்டு அந்தக் கூட்டத்தைத் தவிர்க்க வார நாள்களைப் பெரும்பாலான பக்தர்கள் தேர்ந்து எடுத்தனர். அதன் காரணமாக, வாரயிறுதி நாள்களில் கூட்டம் குறைந்துவிட்டது.
திங்கள் முதல் வெள்ளி வரை சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த ஆண்டு மண்டல பூசை நடைபெற்ற போது இதே காலகட்டத்தில் 21 லட்சம் பக்தர்கள் வருகை அளித்ததாகவும் இவ்வாண்டு 4 லட்சம் பக்தர்கள் அதிகமாக கிட்டத்தட்ட 25 லட்சம் பக்தர்கள் வரை வந்து தரிசனம் செய்திருப்பதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிதாக சபரிமலைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது எண்ணிக்கை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஐயப்ப பக்தர்கள் முன்கூட்டியே தேதிகளை பதிவு செய்துகொண்டு, தரிசனத்துக்கு வரும்போது, அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய போதிய அவகாசம் கிடைக்கும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இம்மாத இறுதியில் பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்று சபரிமலை நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்னர், கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட அனுபவங்களைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சபரிமலை நிர்வாகம், பக்தர்கள் விரைவாகவும் அமைதியாகவும் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

