லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் லக்னோ நகரில் உள்ள இரண்டு வெவ்வேறு சிறைகளில் ஏழு நாள்களில் இரண்டு கைதிகள் மரணமடைந்ததாக வெளியான தகவல்களின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மாநில சிறைத்துறை இயக்குநருக்கும் லக்னோ மாவட்ட ஆட்சியருக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
லக்னோவில் உள்ள வெவ்வேறு சிறைகளில் ஏழு நாள்களில் இரண்டு கைதிகள் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் வேளையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க ஆரம்பித்துள்ளது.
இச்சம்பவம் காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பு குறித்தும் சாத்தியமான மனித உரிமை மீறல்கள் குறித்தும் கவலைகளை எழுப்பியுள்ளது.
நவம்பர் 26 அன்று வெளியான ஊடக அறிக்கை ஒன்றின் அடிப்படையில் இச்சம்பவங்கள் குறித்த விரிவான அறிக்கைகளை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரப் பிரதேச சிறைத்துறை தலைமை இயக்குநருக்கும் லக்னோ மாவட்ட ஆட்சியருக்கும் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது .
செய்திகளில் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், இது மனித உரிமைகளை மீறும் தீவிரமான விவகாரம் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரப் பிரதேச சிறைத்துறை தலைமை இயக்குநர் (சிறைத்துறை டிஜி), லக்னோ மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மரணங்கள் குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்கத் தவறியது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 24 மணி நேரத்திற்குள் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது.
இரண்டு சம்பவங்களும் விசாரிக்கப்படுவதால் இரு கைதிகளின் மரணங்களுக்கான சூழ்நிலைகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
