புதுடெல்லி: அதிகாரபூர்வ ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த அங்கீகாரம் பெற்ற செய்தியாளர்கள் ஏற்கெனவே அதிகளவில் கூடியிருக்கும் போராட்டக் களங்களில், சுயேச்சைப் பத்திரிகையாளர்கள், தன்னுரிமைச் செய்தியாளர்கள், ரீல்ஸ் தயாரிப்பாளர்கள் திரளாகக் கூடுகின்றனர்.
அவர்களின் கருத்துச் சுதந்திர உரிமையைப் பாதுகாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு குடிமகனும் பத்திரிகையாளரானால் அது சிக்கலை ஏற்படுத்தும் என்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) தெரிவித்தது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், போராட்டம் நடைபெறும் இடங்களில் செய்தி சேகரிக்கும் சுயேச்சை, தன்னுரிமை செய்தியாளர்களை டெல்லி காவல்துறை அங்கீகரிப்பதில்லை என்றும் பத்திரிகை தகவல் பணியகத்தின் (பிஐபி) அங்கீகாரத்தை வலியுறுத்துவதாகவும் புகார் தெரிவித்தார்.
நிறுவனத்தின் அடையாள அட்டை வைத்துள்ள எந்தவொரு பத்திரிகையாளரின் தொழில்முறைப் பணியையும் காவல்துறை தடுக்கக் கூடாது என்பதற்கு தேசிய அளவிலான விதிமுறை இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும், தலைமை நீதிபதி சூர்யகாந்த் எச்சரிக்கை உணர்வுடன் ஒரு கருத்தைப் பதிவிட்டார்.
“நாம் ஒவ்வொரு விவகாரத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் பத்திரிகையாளராக மாறத் தொடங்கினால் அது மற்ற ஒவ்வொரு நபருக்கும் பிரச்சினைகளை உருவாக்கும்,” என்று அவர் கூறினார்.
இதனை விளக்கிய நீதிபதி பாக்சி, “கருத்துச் சுதந்திர உரிமை என்பது இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பத்திரிகையாளராகும் அதிகாரத்தை அளிக்குமா என்பதை விரிவாக ஆராய வேண்டியுள்ளது. அது கடினமானது. அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், பதிவுசெய்யப்பட்ட ஊடகங்களில் பணிபுரிபவர்கள் அல்லது அவர்கள் தன்னுரிமை செய்தியாளர்களா, ரீல்ஸ் தயாரிப்பாளர்களா என்பதற்குப் பல அடுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளன,” என்றார்.
மேலும் பேசிய நீதிபதி பாக்சி, வேலை செய்யும் பத்திரிகையாளர்கள் சட்டம் பத்திரிகையாளர்களை பல வகைகளாகப் பிரிக்கிறது, அவை அனைத்தையும் நாம் ஆராய வேண்டியிருக்கிறது என்றும் கூறினார்.
“தற்போதைய மின்னிலக்க தொழில்நுட்ப யுகத்தில், கைப்பேசி வைத்திருக்கும் எந்தவோர் நபரும், ஒருதலைபட்சமான கதைகளை வழங்கியோ அல்லது சம்பவங்களைப் பரபரப்பாக்கியோ சமூக ஊடகங்களில் புகழ்பெற்றுப் பணம் சம்பாதிப்பதற்காக ரீல்ஸ் மட்டுமே செய்து கொண்டிருக்கும் நிலையில் தம்மைச் சுயேச்சை அல்லது தன்னுரிமை பத்திரிகையாளர் என்று உரிமை கோர முடியும்,” என்பதை அரசாங்கத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
