புதுடெல்லி: ரஷ்யாவுடன் நீடித்து வரும் மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும்படி உக்ரேனிடம் வலியுறுத்தியுள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
இது தொடர்பாக உக்ரேன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் அவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.
இதுகுறித்து பின்னர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யா, உக்ரேன் இடையேயான போர் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர், மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருப்பதாகக் கூறியுள்ளார்.
“நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கும் மூன்று ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் மோதல் முடிவுக்கு வரவும் இந்தியா தனது ஆதரவை முழுமையாக வழங்கும். அதற்கான உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினேன்,” என்றார் ஜெய்சங்கர்.
ரஷ்யாவுடனான மோதல் தொடர்பில் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விளக்கம் அளித்ததற்காக உக்ரேன் வெளியுறவு அமைச்சருக்குத் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பாராட்டு தெரிவித்தார் ஜெய்சங்கர்.
ரஷ்யா மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக உக்ரேன் நிலைகுலைந்துள்ளது. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உக்ரேன் மக்கள் கடுமையாகப் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில், இருதரப்புக்கு இடையே அமைதியை ஏற்படுத்த இந்தியா தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளும் என வெளியுறவு அமைச்சு மீண்டும் உறுதி செய்துள்ளது.

