புதுடெல்லி: நாடு முழுவதும் விற்பனையில் இருந்து வந்த 211 மருந்துகளை தரமற்றவை என இந்திய அரசு அறிவித்துள்ளது.
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, அம்மருந்துகளில் சல போலியானவை என்று மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
இது குறித்து அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாரியம் கூறியது.
வழக்கமான நடைமுறையின்படி கடந்த மாதம், இந்தியச் சந்தையில் விற்பனையில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. காய்ச்சல், சளித்தொற்று, கிருமித் தொற்று, செரிமான மண்டல பாதிப்பு உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும் 211 மருந்துகளின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது பல மருந்துகள் தரமற்று விற்கப்படுவதும் ஐந்து மருந்துகள் போலியானவை என்றும் தெரியவந்தது.
இந்தியா முழுவதும் விற்கப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
அண்மையில்கூட, சிறார்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இருமல் மருந்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இதுபோன்ற விவரங்கள் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையத்தளத்தில் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.
பொதுமக்கள் அவற்றைப் பார்வையிட்டு, ஏதேனும் புகார்கள் இருப்பின் அவை குறித்து தெரிவிக்கலாம். தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு, பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்ததாக சா்ச்சை எழுந்தது. ஆனால், உற்பத்தி நிறுவனத்தில் கடந்த மாதம் சோதனை நடத்தியதையோ, கோல்ட்ரிஃப் மருந்தை தரமற்றது என வரையறைப்படுத்தியதையோ தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர் மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.
அதன் காரணமாகவே தரமற்ற மருந்துகளின் விவரங்களை வழங்காத மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்தின் பெயர் இந்த மாதத்தில் இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

