திருப்பூர்: அமெரிக்காவின் வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களையும் மீறி, இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.11,320 கோடியை எட்டிச் சாதனை படைத்துள்ளது. இது கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 11.3 விழுக்காடு வளர்ச்சியாகும்.
இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மைய புள்ளிவிவரங்கள், அனைத்துலகச் சந்தையில் இந்திய ஆடைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடனான வணிகம் இந்த வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது.
“பாரம்பரியச் சந்தைகளைத் தாண்டி, புதிய சந்தைகளை நோக்கி வணிகத்தை விரிவுபடுத்தியதே இந்த வெற்றிக்குக் காரணம். இது, அமெரிக்கச் சந்தையில் நிலவும் பருவகால மாற்றம், சுங்க வரி தொடர்பான சவால்களைச் சமாளிக்க உதவியுள்ளது.
“இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி நிலையான, ஒரே சீரான வளர்ச்சி நிலையோடு பயணித்து வருகிறது. இது, இந்தியாவின் தொழில் துறையின் வலுவான, போட்டித்தன்மையை உறுதிப்படுத்துகிறது.
“சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும்கூட, இந்திய ஏற்றுமதியாளர்கள், தயாரிப்பு பொருளில் தரம், விற்பனையில் குறிப்பிடத்தக்க தகவலமைப்பு, அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
“சந்தை தேவை அதிகரிப்பு, மேம்பட்ட நிலைத்தன்மை முயற்சிகள், வணிக ஒப்பந்தங்களால், நடப்பு நிதியாண்டில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது
“ஏற்றுமதியாளர்களின் நிதிச்சுமையைக் குறைக்கவும், வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு மிகவும் எதிர்பார்க்கப்படும் வட்டி சமநிலைப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
“ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். சந்தை அணுகல் மற்றும் கடன் வசதிகள் தொடர்பான வர்த்தக நிதி ஆதரவு நடவடிக்கைகளைத் தாமதமின்றி வழங்க வேண்டும். இவற்றைச் செயல்படுத்தினால் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி வேகம் மேலும் அதிகரிக்கும்,” என்றார் அவர்.

