புதுடெல்லி: உயிரியல் ஆயுதங்கள் (Biological weapons) தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க இந்தியா குரல் கொடுத்துள்ளது.
அனைத்துலக அளவில் பாதுகாப்புச் சூழல் நிலையற்றிருக்கும் வேளையில் இந்தியா இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அரசாங்கங்களில் இடம்பெறாதபோதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தரப்பினர் (non-state actors) உயிரியல் ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்த சாத்தியமில்லை என்று இனி கூற முடியாது என்றார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர். அத்தகைய சவாலைக் கையாள அனைத்துலக அளவில் ஒத்துழைப்பு இருப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
உயிரியல் ஆயுதங்கள் மாநாட்டின் (பிடபிள்யூசி) 50ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் திரு ஜெய்சங்கர் பேசினார்.
“உயிரியல் ஆயுத பயங்கரவாதம், அனைத்துலக சமூகம் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டிய கவலை தரும் ஒன்றாகும். ஆனால், பிடபிள்யுசியிடம் அடிப்படைச் செயல்பாட்டுக் கட்டமைப்புகள் இல்லை,” என்றார் திரு ஜெய்சங்கர்.
“நடைமுறைக் கட்டமைப்பு, நிரந்தர செயல்பாட்டுக் குழு, புதிய அறிவியல் மேம்பாடுகளை அடையாளம் காண்பதற்கான முறை ஆகியவை அதனிடம் இல்லை. நம்பிக்கையை வலுப்படுத்த இந்தக் குறைபாடுகளுக்குத் தீர்வுகாணவேண்டும்,” என்று அவர் விவரித்தார்.
பிடபிள்யூசியில் மேலும் வலுவான நடைமுறைகள் இருக்கவேண்டும் என்று இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இன்றைய உலகிற்கான சரிபார்ப்பு முறைகளும் அத்தகைய நடைமுறைகளில் அடங்கும்.
“அமைதியான முறையில் (உயிரியல் ஆயுதங்களை) பயன்படுத்துவதற்காக பொருள்களையும் சாதனங்களையும் பரிமாறிக்கொள்வதற்கு அனைத்துலக அளவில் ஒத்துழைப்பும் உதவியும் இருப்பதை இந்தியா ஆதரிக்கிறது,” என்று திரு ஜெய்சங்கர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“புத்தாக்கத்துக்கு ஏற்றவாறு கட்டுப்பாடு, விதிமுறைகள் ஆகியவை அமைய அறிவியல், தொழில்நுட்ப மேம்பாடுகளைத் திட்டமிட்டு மறுஆய்வு செய்யவேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

