வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் இலங்கைக்கு இந்தியா உறுதுணை: ஜெய்சங்கர்

2 mins read
8fb7b7d2-653f-40e3-8bf7-ec785760276a
ஜெய்சங்கர். - படம்: ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களாக நீடித்து வரும் கனமழை காரணமாக இலங்கையின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், இந்தியா பல்வேறு வகைகளில் அந்நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது.

முதற்கட்டமாக, ஏராளமான நிவாரணப்பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, இந்திய விமானப்படையின் ‘சி-17’ போக்குவரத்து விமானம் ஒன்று நவீன வசதிகள் கொண்ட கள மருத்துவமனை அமைப்பு, 70க்கும் மேற்பட்ட மருத்துவ, துணைப் பணியாளர்கள், அத்தியாவசிய வாகனங்களுடன் கொழும்பு சென்றுள்ளது.

செவ்வாய்க்கிழமை அந்த விமானம் கொழும்பில் தரையிறங்கியதாக அமைச்சர் ஜெய்சங்கர் தமது சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் இலங்கையில் முகாமிட்டு தொடர்ந்து பல்வேறு மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதுவரை அந்த ஹெலிகாப்டர்கள் எட்டு டன்களுக்கும் அதிகமான நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்றதாகவும் வெளிநாட்டினர், மோசமான நிலையில் உள்ள நோயாளிகள், ஒரு கர்ப்பிணிப்பெண் உட்பட 65 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் இந்திய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

பாகிஸ்தானுக்கு கண்டிப்பு:

இதனிடையே, இலங்கைக்கு நிவாரணப்பொருள்களுடன் சென்ற பாகிஸ்தான் விமானத்துக்கு இந்திய வான்வெளியைப் பயன்படுத்தும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுவதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என இந்திய வெளியுறவு அமைச்சு கண்டித்தது.

இலங்கைக்கு நிவாரண உதவி அளிப்பதற்காக இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி கோரி இருந்தது. இதை நான்கு மணி நேரத்துக்குள் பரிசீலித்து மனிதாபின அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கப்பட்டதாக இந்தியா தெரிவித்தது.

“ஆனால் பாகிஸ்தான் ஊடகங்கள் வழக்கம்போல் பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு போலி செய்திகளைப் பரப்புகின்றன. இவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்,” என இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. இந்தக் கடினமான காலகட்டத்தில் இலங்கை மக்களுக்கு அனைத்து வகையிலும் கிடைக்கக்கூடிய உதவிகளுக்கு இந்தியா துணை நிற்கும். இது தொடர்பான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்கிறோம்.

“இந்தியாவுக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்புவதற்கு பாகிஸ்தான் மீண்டும் முயற்சி செய்துள்ளது. எனினும் அந்நாடு கோரியபடி பயண அனுமதியை வழங்கியதுடன் முன் மொழியப்பட்ட பயணத் திட்டத்தை அங்கீகரித்தோம்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் ரன்வீர் ஜெய்ஷ்வால் தெளிவுபடுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்