புதுடெல்லி: இந்திய வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் விமானங்களுக்கான கட்டுப்பாடுகளை இந்திய அரசு நீட்டித்துள்ளதாக அந்த நாட்டின் பொது விமானப் போக்குவரத்து அமைச்சின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்தத் தடை டிசம்பர் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பதிவுசெய்த விமானங்கள், பாகிஸ்தானால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள விமானங்கள், ராணுவ விமானங்கள் ஆகியவற்றுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தும்.
முன்னதாக, இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான தடையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளதாக பாகிஸ்தான் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. அதையடுத்து, இந்தியப் பொது விமானப் போக்குவரத்து அமைச்சு, பாகிஸ்தானுக்குப் பதிலடி தரும் வகையில் அந்நாட்டு விமானங்களுக்கான தடையை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த இரண்டு நாடுகளும் அதன் வான்வெளி எல்லைகளுக்கு ஒன்றுக்கொன்று கட்டுப்பாடு விதித்து 8 மாதங்கள் நிறைவு பெற்றன. இந்நிலையில், இந்த இரண்டு நாடுகளுமே அந்தக் கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.
முன்னதாக இந்தியா தரப்பில், “பாகிஸ்தானுக்கான எங்கள் வான்வெளியை மூடுவதைத் தொடர நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதிகாரபூர்வ உத்தரவு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். பாகிஸ்தான் ஏற்கெனவே முடிவை எடுத்துள்ளது. நிச்சயமாக நாங்களும் இதே பாணியில் பதிலடி கொடுப்போம்,” என்று கூறப்பட்டிருந்தது.

