2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்றது இந்தியா: தலைவர்கள் மகிழ்ச்சி

2 mins read
dc0f3c7d-73ed-4b9c-b2b0-22d777532f37
நூற்றாண்டு விழாப் போட்டிகளை நடத்துவது உலக அரங்கில் இந்தியாவின் திறன்கள், ஒற்றுமை, விருப்பங்களை வெளிப்படுத்த ஒரு வரலாற்று வாய்ப்பை வழங்கும் எனத் துணை அதிபர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். - படம்: ஊடகம்

அகமதாபாத்: எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்கான நூற்றாண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. அகமதாபாத்தில் அந்தப் போட்டிகள் நடைபெற இருப்பதை அடுத்து, துணை அதிபர் சி.பி. ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சமூக ஊடகப் பதிவில், இந்த மைல்கல் வளர்ச்சி இந்திய விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பின் கூட்டு வலிமை, திறமை, உணர்வைப் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய விளையாட்டுகளில் இந்தியாவின் வளர்ந்து வரும் தகுதிக்கும் இந்திய விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகளின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் இந்த வெற்றி ஓர் சான்றாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டு விழாப் போட்டிகளை நடத்துவது உலக அரங்கில் இந்தியாவின் திறன்கள், ஒற்றுமை, விருப்பங்களை வெளிப்படுத்த ஒரு வரலாற்று வாய்ப்பை வழங்குவதாகவும் துணை அதிபர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதனிடையே, 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏலத்தில் இந்தியாவின் வெற்றியைப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் பாராட்டி உள்ளனர்.

தமது சமூக ஊடகப் பதிவில், கூட்டு அர்ப்பணிப்பு, விளையாட்டு மனப்பான்மையே உலக விளையாட்டு வரைபடத்தில் இந்தியாவை உறுதியாக நிலைநிறுத்தி உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

2030ஆம் ஆண்டு நூற்றாண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் முயற்சியில் இந்தியா வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

வசுதைவ குடும்பகம் என்ற நெறிமுறையுடன், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டுகளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட இந்தியா ஆர்வமாக உள்ளது என்றும் உலகை வரவேற்க இந்தியா ஆவலுடன் காத்திருக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதனிடையே, காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா தேர்வு பெற்றது, உலகளாவிய விளையாட்டு மையமாக மாற்றுவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு நல்ல சான்று என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

“மதிப்புமிக்க முயற்சியில் இந்தியா வெற்றி பெற்றிருப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமை சேர்க்கும் தருணம். ஒரு சகாப்தத்திற்கும் மேலாக தவம் செய்து, உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை மோடி உருவாக்கியுள்ளார்.

“திறமையான நிர்வாகம், தடையற்ற குழுப்பணி மூலம் நாட்டின் திறனை மேம்படுத்தியுள்ளார்,” என்றும் அமைச்சர் அமித்ஷா மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்