எதிராளியின் ஆளில்லா வானூர்தியை வீழ்த்தவல்ல தானியக்கச் சுற்றுக்காவல் வாகனம் அறிமுகம்

1 mins read
a776321c-c7b2-4d22-9c25-14a217fa737a
இந்தியாவின் முதலாவது ஆளில்லா வானூர்தித் தடுப்புச் சுற்றுக்காவல் வாகனமான ‘இந்திரஜால ரேஞ்சர்’. - படம்: ‘இந்திரஜாலம்’ நிறுவனம்

புதுடெல்லி: இந்தியா முதன்முறையாக முற்றிலும் தானாக இயங்கும் ஆளில்லா வானூர்தி (டிரோன்) தடுப்புச் சுற்றுக்காவல் வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் இந்த ‘இந்திரஜால ரேஞ்சர்’ வாகனம் எதிராளியின் ஆளில்லா வானூர்தியைக் கண்டறிந்து, தொடர்ந்து சென்று, வீழ்த்தவல்லது.

தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அண்மையில் சில நிகழ்வுகள் இடம்பெற்றதை அடுத்து, சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆளில்லா வானூர்திகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆளில்லா வானூர்திகள் மூலம் இந்தியப் பகுதிக்குள் ஆயுதங்களைக் கடத்த முயல்வதாகக் கூறப்படுகிறது. இவ்வாண்டில் மட்டும் அத்தகைய நூற்றுக்கு மேற்பட்ட ஆளில்லா வானூர்திகளை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. அத்துடன், ரூ. 3 லட்சம் கோடி (S$43.65 பில்லியன்) மதிப்புடையதாகக் கருதப்படும் இந்தியாவின் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களும் ஆளில்லா வானூர்திகளையே பெரிதும் பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், “எதிராளியின் ஆளில்லா வானூர்தி வீழ்த்தப்படும் ஒவ்வொரு முறையும் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன; இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது,” என்று ‘இந்திரஜாலம்’ நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிரண் ராஜு கூறினார்.

மேலும், விமான நிலையங்கள், எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள், ராணுவ வளாகங்கள் போன்ற பகுதிகளுக்கான செயல்திறன்மிக்க ‘பாதுகாப்பு டிரோன்’களைத் தமது நிறுவனத்தால் உருவாக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்