புதுடெல்லி: பயங்கரவாதம், நாடு கடந்த குற்றச் செயல்களுக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான கடப்பாட்டை இந்தியாவும் மலேசியாவும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்திய - மலேசிய கூட்டுப் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.
இதில் வட்டார, உலகளாவிய பயங்கரவாத நிலப்பரப்பு குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நாடு கடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவது தொடர்பான இந்தக் கூட்டத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சின் இணைச் செயலாளர் வினோத் பஹாடே, மலேசிய உள்துறை அமைச்சின் துணைச் செயலாளர் முகமட் அஸ்லான் பின் ரசாலி ஆகியோர் இணைந்து தலைமை தாங்கியதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
“பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் கண்டிக்கிறோம். மேலும், பயங்கரவாதத்தை விரிவான மற்றும் நீடித்த முறையில் எதிர்த்துப் போராடுவதற்கு அனைத்துலக ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.
“ஐக்கிய நாடுகள் சபையின் நிதி நடவடிக்கை பணிக்குழு, பணமோசடி தொடர்பான ஆசியா/பசிபிக் குழு மற்றும் ஆசியான் வட்டார மன்றம் (ARF) உள்ளிட்ட பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்,” என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பான கடப்பாட்டை இருநாடுகளும் உறுதிப்படுத்தின.
இந்தியாவும் மலேசியாவும் அடுத்த சுற்று கூட்டுப்பணிக்குழு விவாதங்களை கோலாலம்பூரில் இருதரப்புக்கும் வசதியான தேதியில் நடத்தவும் ஒப்புக்கொண்டன.

