அறைக்குள் பாம்பைவிட்டு மனைவியையும் மகளையும் கொன்ற ஆடவர்

அறைக்குள் பாம்பைவிட்டு மனைவியையும் மகளையும் கொன்ற ஆடவர்

மாதிரிப்படம்

24 Nov 2023 - 3:21 pm

1 mins read

பெர்ஹாம்பூர் (ஒடிசா): நச்சுப்பாம்பை அறைக்குள்விட்டு, மனைவியையும் இரண்டு வயது மகளையும் கொன்ற சந்தேகத்தின்பேரில் 25 வயது ஆடவர் ஒருவரை இந்தியாவின் ஒடிசா மாநிலக் காவல்துறையினர் வியாழக்கிழமை கைதுசெய்தனர்.

கஞ்சம் மாவட்டத்திலுள்ள அதேகான் என்னும் சிற்றூரில் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்குமுன் இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

கணேஷ் பத்ரா என்ற அந்த ஆடவருக்கும் அவரது 23 வயது மனைவி வசந்தி பத்ராவிற்கும் மணவாழ்க்கையில் பிரச்சினை இருந்துவந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்த இத்தம்பதிக்கு தெபஸ்மிதா என்ற இரண்டு வயது மகள் இருந்தாள்.

இந்நிலையில், வழிபாட்டிற்கு வேண்டும் என்று சொல்லி, பாம்பாட்டி ஒருவரிடமிருந்து கருநாகம் ஒன்றை கணேஷ் வாங்கியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த அக்டோபர் 6ஆம் தேதி, ஒரு பிளாஸ்டிக் கலனில் அந்தக் கருநாகத்தைக் கொண்டுவந்த கணேஷ், அதனைத் தம் மனைவியும் மகளும் உறங்கிய அறைக்குள் விட்டார். மறுநாள் காலையில் பார்த்தபோது இருவரும் பாம்பு கொத்தி மாண்டு கிடந்தனர். கணேஷ் இன்னோர் அறையில் உறங்கியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, வசந்தியின் தந்தை, தன் மகளையும் பேத்தியையும் கொன்றுவிட்டதாக கணேஷ்மீது காவல்துறையில் புகாரளித்தார்.

அப்புகாரின்பேரில் புலனாய்வு செய்த காவல்துறை, கணேஷுக்கு எதிராகப் போதிய சான்றுகளைத் திரட்டியபின் அண்மையில் அவரைக் கைதுசெய்தது.

விசாரணையின்போது தன்மீதான குற்றச்சாட்டை முதலில் மறுத்த கணேஷ், பின்னர் பாம்பைவிட்டுக் கொத்தவிட்டு மனைவியையும் மகளையும் கொன்றதை ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்