இந்தியா: ஐந்தில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம்

இந்தியா: ஐந்தில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம்

கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

11 Oct 2026 - 8:08 pm

2 mins read

புதுடெல்லி: வரும் 2030ஆம் ஆண்டிற்குள் குழந்தைத் திருமணத்தை முடிவிற்குக் கொண்டுவர இந்தியா இலக்கு கொண்டுள்ளது.

ஆயினும், உலகில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் மூன்றில் ஒன்று இந்தியாவில்தான் நடக்கிறது. அங்கு 18 வயதை எட்டுவதற்கு முன்பே ஐந்தில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் நடந்துவிடுகிறது.

இந்தியாவில் குழந்தைத் திருமணங்களின் விகிதம் 1996ஆம் ஆண்டில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது அது குறைந்து 20 விழுக்காட்டிற்கும் சற்று அதிகமாக இருக்கிறது. இருப்பினும், தேசிய சராசரி அளவைக் கண்டு ஏமாறிவிடக்கூடாது என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

அனைத்துலகப் பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, இந்தியாவில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில்தான் நடப்பதாக ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) மற்றும் அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், கேரள மாநிலமும் லட்சத்தீவும் குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் 20-24 வயதுப் பிரிவைச் சேர்ந்த 224 மில்லியனுக்கும் அதிகமான பெண்களுக்கு 17 வயதை எட்டுமுன் திருமணம் நடந்துவிடுவதாக யுனிசெஃப் தரவுகள் குறிப்பிடுகின்றன. அவர்களில் கிட்டத்தட்ட 90 மில்லியன் பேருக்கு 15 வயதை எட்டுவதற்கு முன்பே திருமணமாகிவிடுகிறது.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 1,500ஐ எட்டக்கூடும் என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

ஏழ்மையின் காரணமாகவே பெற்றோர் தங்களின் பெண் குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே திருமணம் செய்துவைப்பதாகத் தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

“சிறுமியர் வளர்ச்சியால் பயன்பெறுபவர்கள் மட்டுமல்லர், வளர்ச்சிக்குப் பங்களிப்பவர்களும்கூட. அவர்கள் பங்களிக்கவும் தலைமைத்துவம் ஏற்கவும் உகந்த, பாதுகாப்பான வெளியை அமைத்துத் தரும்போது அவர்கள் வலுவான குடும்பங்களையும் சமூகங்களையும் வடிவமைக்க உதவுவர்,” என்று யுனிசெஃப் அமைப்பின் இந்தியாவிற்கான பேராளர் சிந்தியா மெக்கேஃப்ரி கூறினார்.

இந்தியாவில் பெண் 18 வயதை எட்டுவதற்கு முன்பும் ஆண் 21 வயதை எட்டுவதற்கு முன்பும் திருமணம் செய்துகொள்வது குழந்தைத் திருமணமாகக் கருதப்படும். அத்துடன், 18 வயதிற்கும் குறைந்த தன் மனைவியுடன் ஒருவர் பாலியல் உறவு வைத்துக்கொள்வதும் குற்றமாகக் கருதப்படும்.

குறிப்புச் சொற்கள்