உலகளவில் சொத்து ஆலோசனை வழங்கும் நிறுவனமான ‘நைட் ஃபிராங்க்’, சொத்து அறிக்கை 2025 எனும் உலகில் அதிக பெருஞ்செல்வந்தர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலை புதன்கிழமையன்று (மார்ச் 5) வெளியிட்டது.
அதன்படி, இந்தியாவில் 10 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்துகள் கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 85,698 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் உலகளவில் அதிக செல்வந்தர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தை எட்டியுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் ஜப்பான் மூன்றாவது நிலையிலும் உள்ளனர்.
இந்தியாவின் கடந்த ஆண்டு பெருஞ்செல்வந்தர்களின் எண்ணிக்கையை அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 6 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2023ஆம் ஆண்டு அது 80,686ஆக இருந்தது.
2028 ஆம் ஆண்டுக்குள் 93,753 ஆக அது உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்தியாவின் விரிவடைந்து வரும் செல்வ நிலப்பரப்பைப் பிரதிபலிக்கிறது என்று சொத்து ஆலோசகர் ஒருவர் ‘என்டிடிவி’ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
நாட்டில் பெருஞ்செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் போக்கு, அந்நாட்டின் வலுவான நீண்ட பொருளியல் வளர்ச்சி, அதிகரித்து வரும் முதலீட்டு வாய்ப்புகள், வளர்ந்து வரும் ஆடம்பரச் சந்தை ஆகியவற்றை காட்டுவதாகக் கூறப்படுகிறது. மேலும், உலகளவில் செல்வ வளங்களைப் பெருக்கும் முக்கிய பங்காளியாக இந்தியா இருப்பதை இது காட்டுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்திய பில்லியனரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
“இந்தியா தற்போது 191 பில்லியனர்களைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அவர்களில் 26 பேர் இப்பட்டியலில் இணைந்தனர். 2019ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை வெறும் 7ஆக இருந்தது,” என அந்த ஆலோசகர் கூறினார்.
இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 950 பில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்படி, உலகளவில் 5.7 டிரில்லியன் அமெரிக்க டாலருடன் முதலிடத்திலும் இருக்கும் அமெரிக்காவுக்கும் 1.34 டிரில்லியன் அமெரிக்க டாலருடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.

