மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நிலக்கரியை வேகமாகப் பயன்படுத்தும் இந்தியா

மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நிலக்கரியை வேகமாகப் பயன்படுத்தும் இந்தியா

படம்: புளூம்ஃபர்க்

29 Sep 2026 - 8:24 pm

1 mins read

புதுடெல்லி: நீர், சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி குறைந்ததால் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டைத் தணிக்க, இந்திய மின் நிலையங்கள் நிலக்கரி இருப்பை வேகமாகப் பயன்படுத்தி வருகின்றன.

இதனால் மின் விநியோகத்தை அதிகரிக்க அரசு அவசரகால விதியைப் பயன்படுத்தியுள்ளது.

50 மெகாவாட்டுக்கும் மேலான சொந்த நிலக்கரி மின் உற்பத்தித் திறனைக் கொண்ட எஃகு, உரம், எண்ணெய் சுத்திகரிப்பு, சிமெண்ட் நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை முழுத் திறனுடன் இயக்கி உபரி மின்சாரத்தை விற்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் 70 விழுக்காட்டு மின்சாரத்தை வழங்கும் தனியார் மின் நிலையங்களை விட இவற்றின் உற்பத்தித் திறன் குறைவானதாகும்.

டாடா பவர் நிறுவனத்தின் 4 கிகாவாட் குஜராத் ஆலையையும் டிசம்பர் வரை முழுத் திறனுடன் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எல் நினோ தாக்கத்தால் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பருவமழை பொய்த்ததால், நீர்மின் உற்பத்தி குறைந்து, பாசனத்துக்கான மின் தேவை அதிகரித்தது.

சூரியசக்தி உற்பத்தி குறையும்போது இரவு நேரங்களில் 7.7 கிகாவாட் அளவுக்கு மின் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அண்மைய மழையால் மின்தேவை சற்று குறைந்தாலும் சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் நீர் புகுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

இயற்கைப் பேரிடர் போன்ற அசாதாரணச் சூழ்நிலைகளைக் கையாள உதவும் மின்சாரச் சட்டத்தின் 11வது பிரிவின்கீழ் இந்த அவசரகால நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்