தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா சொந்தத் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்: பியூஷ் கோயல்

2 mins read
8fa3634f-2446-4951-bdc9-d0f480a564eb
பியூஷ் கோயல். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியா தனது சொந்தத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதும் முக்கியமான சில அம்சங்களில் பூகோள ரீதியில் சில தரப்புகளை மட்டும் அதிகம் சார்ந்திருப்பதைக் குறைப்பதும் இன்றியமையாதது என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், எதிர்காலத்திற்கான புதிய யோசனைகள், தயாரிப்புகள், தொழில்நுட்பங்களை இயக்கும் உலகளாவிய கண்டுபிடிப்பு இயந்திரமாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றார்.

இந்தியா, ஐரோப்பிய யூனியனுக்கு இடையே நியாயமான, சமமான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.

பெர்லின் உலக மாநாட்டில் கலந்துகொண்ட வேளையில், அனைத்துலகச் சூழல் குறித்து ஐரோப்பாவைச் சேர்ந்த பல வணிக நிறுவனத்தாருடன் தாம் ஆலோசனை மேற்கொண்டதாகவும் அப்போது இந்தியாவுடன் வர்த்தக உறவு பேண பல நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டியதாகவும் திரு பியூஷ் கோயல் கூறினார்.

மூன்று நாள்கள் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, இருபது அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அவற்றுள் பத்து அம்சங்களில் இருதரப்பிலும் இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

“நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஐரோப்பிய வர்த்தக ஆணையர் இந்தியா வர இருக்கிறார். அப்போது, பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டு, இரு தரப்புக்கும் இடையே பரஸ்பர உணர்வு, வலிமை, வணிகம், முதலீடுகளை ஊக்குவிக்கும் ஒரு பங்காளித்துவத்தை உருவாக்க முனைப்பு காட்டி வருகிறோம்,” என்றார் பியூஷ் கோயல்.

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது என்றும் இந்தியா தற்போது வளரும் பொருளியல் கொண்ட நாடுகளின் பிரதிநிதியாகத் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக நன்மை, சமாதானம், செழிப்புக்கான கூட்டு நடவடிக்கைக்கு இந்தியா துணை நிற்கும் என்றும் இந்தியாவின் மதிப்பு தற்போது உயர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

“நம் மக்களிடையே அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்,” என்றார் அமைச்சர் பியூஷ் கோயல்.

குறிப்புச் சொற்கள்