நியூயார்க்: இந்தியா, ஐக்கிய நாட்டுப் (ஐநா) பாதுகாப்பு மன்றத்தில் பாகிஸ்தானைக் கடுமையாகக் குறைகூறியிருக்கிறது.
இந்தியாவையும் இந்திய மக்களையும் குறிவைத்துத் துன்புறுத்துவதில் பாகிஸ்தான் மிதமிஞ்சி கவனம் செலுத்துவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி தெரிவித்தார்.
சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா முடிவுக்குக் கொண்டுவந்தது ஏன் என்பதையும் அவர் விளக்கினார். பாகிஸ்தான், உலக அளவில் பயங்கரவாதத்தின் மையமாய் இருப்பதாக அவர் சொன்னார்.
“இந்தியா 65 ஆண்டுக்கு முன்னர் நல்லெண்ண அடிப்படையிலும் நட்புறவாலும் சிந்துநதி நீர் உடன்பாட்டைச் செய்துகொண்டது. இந்த 65 ஆண்டுக் காலத்தில் பாகிஸ்தான் மூன்று முறை போர் தொடுத்துள்ளது. அத்துடன் இந்தியாமீது ஆயிரக்கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்களையும் அது நடத்தியுள்ளது,” என்றார் திரு பர்வதனேனி.
கடந்த 40 ஆண்டில், பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயிரக் கணக்கான இந்தியர்கள் உயிரிழந்ததாக அவர் சொன்னார். இவ்வாண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் வட்டாரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்களில் 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் வெளிநாட்டவர்.
அதனால்தான் உடன்பாட்டைப் புறக்கணிக்க இந்தியா முடிவுசெய்ததாகத் திரு பர்வதனேனி குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் ஜனநாயகத்தையும் அரசியல் நிலவரத்தையும் ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தில் அவர் கடுமையாகக் குறைகூறினார்.
மக்களின் விருப்பத்திற்குப் பாகிஸ்தான் வேறு விதமாய் மதிப்பளிக்கிறது என்றார் அவர். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டதையும் ஆளுங்கட்சி கலைக்கப்பட்டதையும் திரு பர்வதனேனி சுட்டினார். அரசமைப்புச் சூழ்ச்சியின் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டதாக அவர் சொன்னார். தற்காப்புப் படைத் தளபதி அசிம் முனிருக்கு வாழ்நாள் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் திரு பர்வதனேனி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பாகிஸ்தான் ஆதரவோடு நடத்தப்படும் அனைத்து வகையான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும் என்றார் அவர்.
ஜம்மு-காஷ்மீர் சச்சரவுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று இதற்கு முன்னர் பாகிஸ்தானின் பிரதிநிதி அசிம் இஃப்திகார் அஹமது கூறியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்தியப் பிரதிநிதியின் கருத்துகள் அமைந்தன.

