புதுடெல்லி: பாக் நீரிணையில் மீன்பிடிப்பது தொடர்பாக இந்தியா-இலங்கை இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி புதுடெல்லியில் துறைசார் கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தத் தகவலை இலங்கை மீன்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் புதன்கிழமை (நவம்பர் 25) உறுதிப்படுத்தினார்.
இரு நாடுகளின் மீன்வளத் துறையைப் பாதிக்கும் முக்கியச் சவால்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.
மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்சினை, கைது நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட உள்ளது.
கடல்சார் சூழலியலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் இலங்கைத் தரப்பில் மீன்வளம், நீர்வள உயிரினங்கள், பெருங்கடல் வளங்கள் துறைச் செயலர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மீன்பிடிப் பிரச்சினைக்கு நிலையான, நடைமுறை சார்ந்த தீர்வை எட்ட இலங்கை உறுதிபூண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, 2024ஆம் ஆண்டில் இலங்கையின் கொழும்பில் இரு நாடுகளின் மீன்வளக் கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அதில், இந்திய மீன்வளத் துறைச் செயலர், கடற்படைப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
