புதுடெல்லி: அங்கீகாரம் பெறா மதரசாக்களிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் அல்லாத மாணவர்களையும் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசின் உத்தரவிற்கு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அவ்விவகாரம் தொடர்பில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் உ.பி. மாநில அரசும் எடுத்த நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப் பிரதேச மதரசா கல்வி மன்றத்தால் அங்கீகரிக்கப்படாத மதரசாக்களில் பயிலும் குழந்தைகளையும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத மாணவர்களையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கவேண்டும் என்று கடந்த ஜூன் 26ஆம் தேதி உ.பி. அரசு, அனைத்து மாவட்டக் குற்றவியல் நீதிபதிகளுக்கும் உத்தரவிட்டிருந்தது. ஜூன் 7ஆம் தேதி தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய கடிதத்தைச் சுட்டி, அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அதனை எதிர்த்து, ஜாமியாத் உலெமா இ ஹிந்த் அமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது.
அவ்வமைப்பு தாக்கல் செய்த மனுக்களைத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூவர் கொண்ட அமர்வு விசாரித்தது.
அவ்வழக்கில் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 21) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் குழு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசு வெளியிட்ட உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது எனக் குறிப்பிட்டு, அதற்கு இடைக்காலத் தடை விதித்தது.