பணக்காரப் பயனீட்டாளர்கள்: சீனாவை விஞ்சும் இந்தியா

பணக்காரப் பயனீட்டாளர்கள்: சீனாவை விஞ்சும் இந்தியா

சித்திரிப்புப் படம்: ஃபேர் அப்சர்வர்

25 Aug 2026 - 7:41 pm

1 mins read

புதுடெல்லி: அதிகப் பொருள்கள் வாங்குவது, சேவைகளைப் பயன்படுத்தும் திறன் கொண்ட ‘செல்வந்தப் பயனீட்டாளர்’ எண்ணிக்கையில் 2036ஆம் ஆண்டுக்குள் இந்தியா, சீனாவை விஞ்சும் எனப் புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

அனைத்துலக ஆய்வு நிறுவனங்களான ‘நீல்சன் ஐக்யூ’, ‘வேர்ல்ட் டேட்டா லேப்’ இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், நாள்தோறும் ஏறக்குறைய 90 டாலருக்கும் (ரூ.8,600க்கும் அதிகம்) அதிகமாகச் செலவழிக்கும் பயனீட்டாளரின் வளர்ச்சிப் போக்கு குறித்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2026ல் 2.6 கோடியாக இருக்கும் செல்வந்தப் பயனீட்டாளரின் எண்ணிக்கை, அடுத்த பத்தாண்டுகளில் 8.2 கோடி அதிகரித்து, 2036ல் 10.8 கோடியை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதே காலக்கட்டத்தில் சீனாவில் இந்த எண்ணிக்கை 10.3 கோடியாக மட்டுமே இருக்கும். இதன் மூலம் ஆசிய வட்டாரத்தில் மிகப்பெரிய பயனீட்டாளர் சந்தையாக இந்தியா உருவெடுக்கும் எனத் தெரிகிறது.

அதேவேளையில், 23.1 கோடி செல்வந்தப் பயனீட்டாளருடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும்.

மேலும், 2026ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 13 அமெரிக்க டாலர் முதல் 90 அமெரிக்க டாலர் வரை செலவிடும் பயனீட்டாளரின் எண்ணிக்கை 64.9 கோடியாக உள்ளது. அவர்கள் விரைவாக அடுத்த கட்ட செல்வந்த நிலைக்கு முன்னேறி வருகின்றனர் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்
சீனாசெல்வந்தர்பொருளியல்அமெரிக்க டாலர்ஆய்வுநிறுவனம்அறிக்கை