புதுடெல்லி: அமெரிக்காவும் இந்தியாவும் இருதரப்பு வணிக ஒப்பந்தத்தை விரைவில் எட்ட இருப்பதாக இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தக் கட்டமைப்பு, அதனைச் செயல்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக நீண்டகாலமாக நீடித்து வந்த பிரச்சினைகள் தற்போது சீராகி வருவதாகவும், பரிந்துரைக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்படும் கட்டத்தில் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று ‘2026 இந்தியக் கடன் மூலதனச் சந்தை உச்சிமாநாட்டில்’ காணொளி வழியாக உரையாற்றிய திரு கோயல் கூறினார்.
அமெரிக்கா, இந்தியா இடையே வர்த்தக மோதல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்தியப் பொருள்கள் மீது 50 விழுக்காடு கூடுதல் இறக்குமதி வரி விதித்தார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அது 10 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது.
தற்போது, உற்பத்தித் திறன் மிகையாக இருப்பதாகக் கூறி, இந்தியப் பொருள்கள் மீது 25 விழுக்காடு வரை புதிய இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா அண்மையில் பரிந்துரைத்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில், இவ்வரியை 17 விழுக்காடாக நிர்ணயிக்க முயற்சிகள் நடக்கும் நிலையில், அதனை 25 விழுக்காடாக உயர்த்த அமெரிக்க வர்த்தக அமைப்பு பரிந்துரைத்துள்ளது. மிகை உற்பத்தித் திறன் குறித்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளதோடு, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் வணிகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தியுள்ளது.
வரிப் பரிந்துரைகளுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 59.52 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 52 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இவ்வாண்டின் பிற்பகுதியில் இறுதி செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் திரு கோயல் குறிப்பிட்டார்.
