புதுடெல்லி: இந்தியாவில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் திறக்க அந்நாட்டின் பொருளியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் 2026-27 நிதியாண்டிலிருந்து ஒன்பது ஆண்டுகாலத்தில் அப்பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான கட்டுமானம் மற்றும் இயக்கச் செலவினங்களுக்கு ரூ.5,862 கோடி (S$851.8 மில்லியன்) தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதன்முறையாக, அந்த 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் பாலர் பள்ளிகளும் அமையவிருக்கின்றன. தொடக்கப் பள்ளியில் சேர்வதற்கு முந்திய மூன்று ஆண்டுகளுக்கான அடிப்படைக் கல்வி அங்கு வழங்கப்படும்.
தற்காப்பு, துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட மத்திய அரசுப் பணியாளர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளை நிறைவுசெய்வதற்காக முதன்முறையாக 1962ஆம் ஆண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளித் திட்டம் தொடங்கப்பட்டது.
இப்போதைக்கு மொத்தம் 1,288 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அவற்றுள் மாஸ்கோ, காத்மாண்டு, டெஹ்ரான் ஆகிய வெளிநாட்டு நகரங்களில் செயல்படும் மூன்று பள்ளிகளும் அடங்கும்.
இவ்வாண்டு ஜூன் மாத இறுதி நிலவரப்படி, அப்பள்ளிகளில் மொத்தம் 1.362 மில்லியன் மாணவர்கள் பயில்வதாக அரசுத் தரவு தெரிவிக்கிறது.
புதிதாக அமைக்கப்படவுள்ள 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 20 பள்ளிகளை இப்போது அப்பள்ளி எதுவும் இல்லாத மாவட்டங்களில் அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.