புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை, மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 விழுக்காடு உயர்த்துவதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு இந்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) ஒப்புதல் அளித்தது.
மக்களவையிலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் மகளிர்க்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க இது வகைசெய்கிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், புதிய தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்வதற்கான தனி மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, மக்களவையின் மொத்த இடங்கள் 550லிருந்து 850ஆக உயரக்கூடும். மாநிலங்களுக்கு 815 இடங்களும் ஒன்றிய ஆட்சிப்பகுதிகளுக்கு 35 இடங்களும் ஒதுக்கப்படும். இதனையடுத்து, தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39லிருந்து 59ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடஒதுக்கீட்டிற்கு 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொள்வதால், மாநிலங்களின் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மாறாது.
மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என திமுக உள்ளிட்ட தென்மாநிலக் கட்சிகள் வலியுறுத்தின. கடந்த ஏப்ரலில் இம்மசோதாக்களை எதிர்த்து வாக்களித்த அக்கட்சிகளின் முக்கியக் கோரிக்கை அதில் ஏற்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களை 2051ஆம் ஆண்டுவரை 25 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்ற திமுகவின் மற்றொரு கோரிக்கையும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.
2026 தொகுதி மறுவரையறை (இரண்டாம்) மசோதாவின்படி, மாநிலங்களுக்குள் தொகுதி எல்லைகள் மாற்றியமைக்கப்படும். பட்டியலின, பழங்குடியினருக்கான இடஒதுக்கீடும் 2011 தரவுகளின்படி வகுக்கப்படும். மேலும், மாநிலச் சட்டமன்ற இடங்களை அதிகபட்சம் 650ஆக உயர்த்தவும், அவற்றில் மூன்றிலொரு பங்கை மகளிருக்கு ஒதுக்கவும் மசோதா வழிவகுக்கிறது.
இச்சட்டம் நிறைவேறியபின் நடைபெறும் முதல் தொகுதி மறுவரையறைக்குப் பிறகு இது நடப்புக்கு வரும். அதன்படி, 2029 மக்களவைத் தேர்தலிலும் அதன்பின் வரும் சட்டமன்றத் தேர்தல்களிலும் 50 விழுக்காடு கூடுதல் இடங்கள் இருக்கும். மகளிர் இடஒதுக்கீடு தற்போதைக்கு 15 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். அதற்குள்ளேயே பட்டியலின, பழங்குடியின இடஒதுக்கீடும் அமலாகும்.
மாநிலங்களவை, மாநிலச் சட்டமேலவை இடங்களில் எந்த மாற்றமும் முன்மொழியப்படவில்லை. அம்மசோதாக்களை நிறைவேற்ற நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நான்கு நாள் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
