புதுடெல்லி: இண்டிகோ விமானச் சேவை பாதிப்பு விவகாரத்தில் இந்திய அரசாங்கம் தலையிட்டு பிரச்சினையைத் தீர்க்க முயன்று வருகிறது.
இண்டிகோ விமானங்கள் இயங்காததைச் சாதகமாகப் பயன்படுத்தி இதர விமான நிறுவனங்கள் கண்மூடித்தனமாக பயணச்சீட்டுக் கட்டணத்தை ஏற்றுவதற்கு விமானப் போக்குவரத்து ஆணையம் கடிவாளம் போட்டுள்ளது.
உள்நாட்டு விமானப் பயணக் கட்டணத்தை அதிகபட்சமாக 18,000 ரூபாய் (S$259) வரை மட்டுமே வசூலிக்கவேண்டும் என அது சனிக்கிழமை (டிசம்பர் 6) மாலை உத்தரவிட்டது.
அத்துடன், தனது நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க இண்டிகோ விமான நிறுவனம் கோரிய 21 நாள் கெடுவை ஆணையத்தின் தலைவர் சமீர் குமார் சின்கா ஏற்கவில்லை.
இன்னும் இரண்டு நாள்களில் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டிவிட்டு, விமானச் சேவையை வழக்கநிலைக்கு முழுமையாகக் கொண்டுவரவேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நேரில் பேச இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்சுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு விமானச் சேவையில் இண்டிகோ நிறுவனம் 60 விழுக்காடு பங்கு வகிக்கிறது.
அதற்கேற்ப, பாதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணத்தைத் தொடர இயலாத பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) இரவு 8 மணிக்குள் அவர்களின் பயணக் கட்டணத்தைத் திரும்பத் தந்துவிடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், பயணப் பெட்டிகளை இரண்டு நாள்களுக்குள் பயணிகளிடம் திருப்பித் தந்துவிடவேண்டும் எனவும் இண்டிகோவிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வேறு தேதியில் பயணத்தை மாற்றிக்கொள்ள விரும்பும் பயணிகளிடம் பயண மாறுதல் கட்டணம் எதையும் இண்டிகோ வசூலிக்கக்கூடாது என்றும் ஆணையம் கூறியுள்ளது.
ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கான புதிய வேலை நேர விதிகளைக் கடைப்பிடிக்காதபோது, பயணிகளிடம் அந்நிறுவனம் பயண மாறுதல் கட்டணம் வசூலித்ததை அது சுட்டிக்காட்டியது.
இண்டிகோ நிறுவனம் இதர விமான நிறுவனங்களைப் போல வேலைநேர வரம்புகள் குறித்து விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் அலுவலகத்திடம் தெரிவிப்பதில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், விமானங்கள் இயங்காதபோது சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அதிகாரிகளுக்கோ பயணிகளுக்கோ உரிய நேரத்தில் தெரிவிக்க இண்டிகோ தவறியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

