புதுடெல்லி: வட இந்திய மாநிலமான ஹரியானாவில் உள்ள மெட்டா (Meta) அலுவலகங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முக்கிய எதிர்த்தரப்புக் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களைக் காவல்துறையினர் தண்ணீர்ப் பீரங்கிகளைப் பயன்படுத்திக் கலைத்துள்ளனர்.
எதிர்க்கட்சியினரின் குரல்களை மெட்டா நிறுவனம் தடைசெய்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் நலன்களுக்காக அது செயல்படுவதாகவும் கூறி, காங்கிரஸ் கட்சியின் இளையர் அணித் தொண்டர்கள் மெட்டா அலுவலகங்களுக்கு வெளியே பெருமளவிலான ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
பயனர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகியவற்றின் முதன்மை நிறுவனத்திற்கு மிகப்பெரிய சந்தையாக விளங்கும் இந்தியாவில், இது அந்நிறுவனம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது.
உள்ளூர்ச் சட்டங்களுக்கு இணங்கவே இந்தியாவில் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்துவதாக மெட்டா நிறுவனம் கூறுகிறது. அந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்து அந்நிறுவனம் வெளிப்படையாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சியுடன் நடைபெற்ற தனிப்பட்ட கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தான் நடுநிலையுடன் செயல்படுவதாய் அது தெரிவித்ததாக இந்த விவகாரம் குறித்து நன்கு அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
எதிர்க்கட்சியின் இளையர் அணி மெட்டா நிறுவனத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் எதிராக வழக்குத் தொடுத்துள்ளது. பதிவுகளின் நகல்களைத் தானியக்க முறையில் அகற்றி, உள்ளடக்கக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தும் விதிமுறையை ரத்து செய்யுமாறு அது கோரியுள்ளது.
குருகிராமில் உள்ள மெட்டா அலுவலகத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, காவல்துறையினர் தங்கள் கட்சித் தொண்டர்கள்மீது தண்ணீர்ப் பீரங்கிகளைப் பயன்படுத்தி அசுத்தமான நீரைப் பீய்ச்சியடித்து நனைத்ததாகக் காங்கிரஸ் கட்சியின் இளையர் அணி, ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது. அதோடு, கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்திப் போராடியவர்கள்மீது அரசாங்கம் வலுக்கட்டாய நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அது குற்றஞ்சாட்டியது.
காவல்துறையினர் கட்சி ஆதரவாளர்கள் சிலரைக் கைது செய்தபோதிலும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நேரடி சாட்சி ஒருவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநிலத் தேர்தல்களில் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகியவை முக்கியப் பிரசாரத் தளங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த உள்ளடக்கக் கட்டுப்பாடுகள் தங்களைப் பாதகமான நிலையில் வைப்பதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
