எதிர்காலம் போரில் அல்ல, அமைதியில் உள்ளது: பிரதமர் மோடி

2 mins read
08826874-77cb-49ad-ba4f-beebc4c1c1bb
பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ் ரயில், புலம்பெயர்ந்த இந்தியர்களுக்காக அமைக்கப்பட்ட சிறப்புச் சுற்றுப்பயணி ரயில். - படம்: ‘எக்ஸ்பி’ பிரிவு, இந்திய வெளிப்புற விவகாரங்களுக்கான அமைச்சு

ஒடிசா: ஒடிசாவில் நடைபெறும் 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

உலகின் ஆக இளைய, ஆக திறமையான மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா பல்லாண்டுகளுக்கு நினைவில் இருக்கும் என்று முன்னதாக திரு மோடி கூறியிருந்தார்.

பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பேசிய திரு மோடி, சமூகத்தின் புலம்பெயர்ந்த இந்தியர்களின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார்.

“புலம்பெயர்ந்தோரை நான் என்றைக்கும் இந்தியாவின் தூதர்களாகக் கருதுகிறேன்,” என்றார் அவர்.

முன்னதாக, திரு மோடி நான்கு கண்காட்சிகளைத் தொடங்கி வைத்தார். அதன் பிறகு, கண்காட்சிகளையும் தொழிற்சங்க, மாநில அமைச்சுகள், துறைகள் ஆகியவற்றின் கடைகளையும் அவர் சுற்றிப்பார்த்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய வெளிப்புற விவகாரங்களுக்கான அமைச்சும் ஒடிசா அரசாங்கமும் ஜனவரி 8 முதல் ஜனவரி 10 வரை 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டைக் கூட்டாக நடத்துகின்றன.

இதற்கிடையே, மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, “எதிர்காலம் போரில் இல்லை, அமைதியில்தான் உள்ளது,” எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

“இந்தியா ஜனநாயகத்தின் தாய் மட்டுமல்ல, ஜனநாயகம் மக்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி,” என்றார் அவர்.

“உலகமே இன்று இந்தியா சொல்வதைக் கேட்கிறது. அது தனது சொந்தக் கருத்துகளை மட்டும் திடமாக முன்வைக்கவில்லை. உலகளாவிய தெற்கின்(Global South) கருத்தையும் முன்வைக்கிறது. அதன் பாரம்பரியத்தின் வலிமை காரணமாக, எதிர்காலம் போரில் இல்லை, புத்தரின் (அமைதியில்) உள்ளது என்பதை உலகிற்குச் சொல்ல இந்தியாவால் முடிகிறது,” என்று திரு மோடி கூறினார்.

1947ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து புலம்பெயர்ந்தோர் முக்கியப் பங்கை ஆற்றியுள்ளதாகவும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அவர்களின் உதவி நாடப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

“இந்தியா ஓர் இளம் நாடு மட்டுமல்ல, திறமையான இளைஞர்களைக் கொண்ட நாடு,” என்றார் அவர்.

இந்திய இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், அவர்கள் திறன்களுடன் செல்வதை அரசாங்கம் உறுதிப்படுத்த முயற்சி செய்வதாகவும் அவர் சொன்னார். உலகம் முழுவதும் திறமையான தொழிலாளர்களின் தேவையை அவர் சுட்டினார்.

“இந்தியாவின் பன்முகத்தன்மையை உலகம் நேரில் கண்டறிவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி-20 மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“நாம் பன்முகத்தன்மையைக் கற்றுக்கொள்ளவேண்டிய தேவை இல்லை. நமது வாழ்க்கை பன்முகத்தன்மையின் மூலம் இயங்குகிறது என்பதே அதற்குக் காரணம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்