இந்திய விண்வெளித் துறை ஈர்ப்பு மிகுந்ததாக மாறி வருகிறது: மோடி

1 mins read
d7457a78-6c8e-40f2-9711-99b34166c223
பிரதமர் மோடி. - படம்: பிஐபி

புதுடெல்லி: இந்திய விண்வெளித் துறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் உலக முதலீட்டாளர்களுக்கு இந்திய விண்வெளித் துறை ஈர்ப்பு மிகுந்ததாக மாறி வருகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்திய விண்வெளித் துறையில் இளையர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஹைதராபாத்தில் விண்வெளித் தொழில்துறை தொடர்புடைய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தை காணொளி வாயிலாக தொடங்கி வைத்துப் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

இந்திய தனியார் துறையினரும் விண்வெளித் தொழில்துறையில் சிறப்பாக செயல்படத் தொடங்கியதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியாவின் தனியாருக்கு சொந்தமான முதல் உந்துகணை (ராக்கெட்) ‘விக்ரம்1-ஐ’ அறிமுகம் செய்து வைத்தார்.

“இந்தத் துறையில் தொடங்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட புதிய தொழில் நிறுவனங்கள் புதிய நம்பிக்கையைத் தருகின்றன. இதனால் இளையர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். பல ஆண்டுகளாக நமது விண்வெளிப் பயணத்திற்கு இஸ்ரோ உறுதுணையாக இருக்கிறது.

“இந்திய இளையர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு அளிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு வாய்ப்பையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகின்றனர். விண்வெளித் துறையைப்போல் அணுசக்தித் துறையிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்களைச் செய்து வருகிறோம்,” என்றார் பிரதமர் மோடி.

வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் முதலீட்டாளர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த ‘ஸ்கை ரூட்’ ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியாவின் முன்னணி தனியார் விண்வெளித் தொழில் துறை நிறுவனமாகும்.

குறிப்புச் சொற்கள்