விசாகப்பட்டினம்: இந்தியாவின் ஆக நீளமான கண்ணாடி வான்பாலம் (sky-walk bridge) பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
கண்ணாடியால் செய்யப்பட்டுள்ள இப்பாலம் கடலுக்கு 1,000 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. விசாகப்பட்டின நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பாரத் திங்கட்கிழமை (டிசம்பர் 1) இப்பாலத்தை அதிகாரபூர்வமாக பொதுமக்களுக்குத் திறந்து வைத்தார்.
புதிய வான்பாலம், கைலாசகிரி மலையின் உச்சியில் அமைந்துள்ளது. மிக உயரத்திலிருந்து விசாகப்பட்டினத்தின் அழகைக் காண இப்பாலம் மக்களுக்கு வகைசெய்கிறது.
கிழக்குக் கடற்கரைப் பகுதியின் பொக்கிஷமாகப் (Jewel on the East Coast) பார்க்கப்படுகிறது, ஆந்திர மாநிலத்தின் துறைமுக நகரான விசாகப்பட்டினம். ரூ. 7 கோடி (1.013 மில்லியன் வெள்ளி) செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வான்பாலம் டிசம்பர் மாத விடுமுறைக் காலத்தை சுற்றுப்பயணிகளுக்கு மிகவும் விறுவிறுப்பானதாக ஆக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என என்டிடிவி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
50 மீட்டர் நீளம்கொண்ட இப்பாலம், ஒரு முனையிலிருந்து மட்டும் நீண்டு செல்லும் கண்ணாடி வான்பாலமாகும் (cantilever glass skywalk). இது, இந்தியாவின், அத்தகைய ஆக நீளமான பாலம்.
மலைப் பகுதியிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பாலத்தின்கீழ் அதைத் ‘தாங்கிப் பிடிக்க’ எந்தக் கட்டுமானமும் கிடையாது. அதனால் இதன்மேல் நிற்கும்போது வானில் மிதக்கும் உணர்வு ஏற்படுகிறது.

