புதுடெல்லி: வளைகுடாப் போரால் மேற்கு ஆசியாவில் உர விநியோகத் தொடர் பாதிக்கப்பட்ட நிலை இந்திய வேளாண்மையின் வெளிநாட்டுச் சார்பை எடுத்துரைத்துள்ளது.
இதையடுத்து, எரிவாயு அடிப்படையிலான ஆறு உர உற்பத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் புதன்கிழமை (நவம்பர் 25) ஒப்புதல் அளித்தது. தேசிய யூரியா முதலீட்டுக் கொள்கை 2026இன்கீழ் ரூ.54,000 கோடி முதலீட்டில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள், தனியார் உற்பத்தியாளர்கள் பங்கேற்புடன் சென்னை, நங்கல், ஷாஜகான்பூர், பனாகர், கடேபன், ஜகதீஷ்பூர் ஆகிய ஆறு இடங்களில் இவ்வாலைகள் அமையும். இவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கு 1.27 மில்லியன் டன் வீதம் மொத்தம் 7.62 மில்லியன் டன் உற்பத்தித் திறனைக் கொண்டிருக்கும்.
இந்தியாவின் வருடாந்தர உரத் தேவை ஏறக்குறைய 40 மில்லியன் டன்னாக உள்ளது. 2014-15ல் 22.5 மில்லியன் டன்னாக இருந்த உள்நாட்டு உற்பத்தி 2025-26ஆம் ஆண்டில் 29.33 மில்லியன் டன்னாக உயர்ந்தபோதும், அதிகரிக்கும் தேவையால் தற்சார்பு எட்டப்படவில்லை. அனைத்துலக விலை உயர்வால் அரசாங்கத்தின் மானியச் செலவு கூடுவதோடு விதைப்புக் கால விநியோகமும் கிராமப்புற வருமானமும் பாதிக்கப்படுகின்றன.
2012ஆம் ஆண்டுக் கொள்கையின் தொடர்ச்சியாக, புதிய கொள்கை 12-16 விழுக்காட்டுப் பங்கு ஈவு வருவாயையும் அந்நியச் செலாவணி இடர் பாதுகாப்பையும் வழங்குகிறது. சென்னையில் 60 ஆண்டுகளுக்கும் நங்கலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் பழைமையான ஆலைகளுக்குப் பதிலாக நவீன ஆலைகள் அமைக்கப்படும். இதனால் எரிவாயுப் பயன்பாடு குறைந்து பாதுகாப்பு மேம்படும். எனினும், பழைய ஆலைகள் மூடப்படுவதால் நிகர உற்பத்தி உயர்வு குறைவாகவே இருக்கும்.
இறக்குமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயுவை இந்தியா நம்பியிருப்பதால் எரிசக்தி இறக்குமதிச் சார்பு தொடரக்கூடும். எனவே, எரிவாயுக் கொள்முதலைப் பன்முகப்படுத்துவது அவசியம்.
மானிய விலையால் யூரியா அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் மண்வளமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயு வெளியேற்றமும் அதிகரிக்கிறது. மண் பரிசோதனை, சரிவிகித ஊட்டச்சத்துப் பயன்பாடு, மானியச் சீர்திருத்தம் ஆகியவற்றின் மூலம் குறைந்த உரத்தில் அதிக விளைச்சலைப் பெறுவதே உண்மையான உரப் பாதுகாப்பையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்.
