இந்திய மக்கள்தொகை ஆய்வுச் சங்கப் பொதுச் செயலாளர் கருத்து

இந்திய மக்கள்தொகை 2080க்குள் நிலைப்படும் எனக் கணிப்பு

2 mins read
aab52f8d-0a3c-45f5-8022-9fd314702056
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. - படம்: இணையம்

கோல்கத்தா: இந்தியாவின் மக்கள்தொகை 2080ஆம் ஆண்டுக்குள் 1.8 அல்லது 1.9 பில்லியனில் நிலைபெற்றுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது அதற்குக் காரணம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மக்கள்தொகை குறையும்போது அந்த இடத்தை நிரப்ப பிறப்பு விகிதம் 1.9ஆக இருக்கவேண்டும். தற்போதைய பிறப்பு விகிதம் அதைவிடக் குறைவாக இருப்பதாக இந்திய மக்கள்தொகை ஆய்வுச் சங்கத்தின் (ஐஏஎஸ்பி) பொதுச் செயலாளர் அனில் சந்திரன் பிடிஐ ஊடகத்திடம் குறிப்பிட்டார்.

“2000ஆம் ஆண்டு நமது பிறப்பு விகிதம் 3.5ஆகப் பதிவானது. இப்போது அது 1.9ஆக இருக்கிறது. இது மிகப் பெரிய சரிவாகும்,” என்று திரு சந்திரன் சுட்டினார்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் பிறப்பு விகிதம் பெரிய அளவில் குறைந்துவரும் நிலையில் அந்நாட்டின் மக்கள்தொகை நிலவரம் மிக வேகமாக மாறி வருவதாகவும் அவர் சொன்னார். 2080ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகை 1.8 அல்லது 1.9 பில்லியன் என்ற உச்சத்தைத் தொட்டு நிலைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இந்தியாவின் அதிகபட்ச மக்கள்தொகை இரண்டு பில்லியனுக்குக் குறைவாக இருக்கும் என்று எல்லா கணிப்புகளும் காட்டுகின்றன,” என்றும் திரு சந்திரன் சொன்னார்.

மேம்பாடுகள், கல்வி கற்போர் அதிகரிப்பது ஆகியவற்றின் காரணமாக பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக அவர் சொன்னார்.

மேலும், அதிக பெண்கள் கல்வி கற்று வருவது திருமணம், பிள்ளைப்பேறு ஆகியவற்றில் எடுக்கப்படும் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக திரு சந்திரன் தெரிவித்தார். இதனையடுத்து குடும்பங்கள் சிறிதாகி வருவதாக அவர் சுட்டினார்.

“இக்காலத்தில் தம்பதியருக்குக் கூடுதல் தகவல்கள் தெரிவதுடன் எப்போது பிள்ளை பெற்றுக்கொள்வது, எத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வது ஆகிய அம்சங்களில் கூடுதல் கட்டுப்பாட்டுடன் செயல்படுகின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.

வயதான பிறகு மணமுடிப்பது, பொருளியலில் கூடுதல் வாய்ப்புகள் இருப்பது ஆகியவை பிள்ளை பெற்றுக்கொள்வதன் தொடர்பிலான முடிவுகளை எடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் திரு சந்திரன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்