இண்டிகோ விமானச் சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பியதாக நிர்வாகம் அறிவிப்பு

3 mins read
8a6b38e9-0cac-46ac-9c08-482bab73b954
இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரியான பீட்டர் எல்பர்ஸ் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். - படம்: இன்ஸ்டகிராம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த சில வாரம் இண்டிகோவின் ஆயிரக்கணக்கான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதால் விமான நிலையங்களில் பெருங்குழப்பம் ஏற்பட்டு, பயணிகள் பல மணி நேரம் அவதிக்குள்ளாகினர்.

இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய விதிகளுக்கு ஏற்ப அந்நிறுவனம் செயல்படத் தவறியதே அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் அதிக அளவு எண்ணிக்கையில் உள்நாட்டுச் சேவைகளை வழங்கும் இண்டிகோ, சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பியிருப்பதாக செவ்வாய்க் கிழமை மாலை (டிசம்பர் 9) அறிவித்தது.

“எங்களுடைய நேரத்தோடு செயல்படும் விமானச் சேவைகள் வழக்குத் திரும்பிவிட்டன,” என்று இண்டிகோ அறிக்கையில் குறிப்பிட்டது.

அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பீட்டர் எல்பர்ஸ், “இண்டிகோ சேவைகள் நிலைப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பயணிகள் தங்களுடைய கட்டணங்களை முழுமையாகத் திரும்பப் பெற்று வருகின்றனர். இந்த நடைமுறைகள் தொடரும். விமான நிலையங்களில் சிக்கியிருந்த பயணிகளின் உடைமைகள் வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் தேவையைக் கவனித்து வருகிறோம்,” என்று இன்ஸ்டகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர், மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

நெதர்லாந்தைச் சேர்ந்த பீட்டர் எல்பர்ஸ், இதற்கு முன்பு நெதர்லாந்தின் கேஎல்எம் விமான நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார்.

செவ்வாய்க் கிழமை 1,800க்கும் மேற்பட்ட சேவைகள் இயக்கப்பட்டதாகவும் மறுநாள் புதன் கிழமை (டிசம்பர் 10) ஏறக்குறைய 1,900 விமானச் சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இண்டிகோ நிர்வாகம் கூறியது.

ஆனால் இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககம் (டிஜிசிஏ), திட்டமிடப்பட்ட விமானச் சேவைகளில் ஐந்து விழுக்காட்டை குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இண்டிகோ இன்னமும் நேரத்தோடு சேவைகளை இயக்கும் திறனை வெளிப்படுத்தவில்லை என்று அதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிய விதிமுறைகளுக்கு ஏற்பட திட்டமிடலில் இடைவெளி ஏற்பட்டு விட்டதையும் தவறாகக் கணித்துவிட்டதையும் அந்த தனியார் நிறுவனம் ஒப்புக் கொண்டது.

புதிய விதிமுறைகளுக்கு ஆயத்தமாக அதற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் இருந்தது.

கடந்த வாரம் விமானிகள் தொடர்பான புதிய விதிமுறை அமலுக்கு வந்தது. விமானிகளுக்கு போதுமான ஓய்வு அளிப்பதும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் இதன் நோக்கம்.

இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரான ராம் மோகன் நாயுடு, விமானிகளுக்கான நேர வரம்புக்கான விதிமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுவதாகக் கூறினார்.

செவ்வாய்க் கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய திரு நாயுடு, “இந்த விமானச் சேவைகள் இடையூறு குறித்து விரிவான அமலாக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. எந்தவொரு விமான நிறுவனமும், எவ்வளவு பெரியதாக இருந்தாலும் திட்டமிடலில் தோல்விகள், புதிய விதிமுறைகளுக்கு இணங்காதது அல்லது சட்டப்பூர்வ விதிகளைப் பின்பற்றாதது மூலம் பயணிகளுக்கு இதுபோன்ற சிரமத்தை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம்,” என்றார்.

இதற்கிடையே, 9வது நாளாக இன்றும் (டிசம்பர் 10) இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையிலிருந்து புதன்கிழமை டில்லி, மும்பை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 14 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தினமலர் தகவல் தெரிவித்தது.

நேரத்தோடு விமானச் சேவைகளை வழங்கிய நிறுவனமாக பெயர் பெற்ற இண்டிகோவுக்கு தற்போதைய நெருக்கடி, மீண்டும் அத்தகைய நற்பெறரை எடுப்பதில் மிகப்பெரிய சவாலாக எனத் தெரிகிறது.

இந்தியா, உலகின் வேகமாக வளர்ந்து வரும் விமானச் சந்தைகளில் ஒன்றாகும். கடந்த மாதம் முதல் முறையாக தினசரி விமானச் சேவைகளின் எண்ணிக்கை 500,000ஐத் தொட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்