அகமதாபாத்: சவூதி அரேபியாவின் மதினாவிலிருந்து வியாழக்கிழமை (டிசம்பர் 4) இண்டிகோ விமானம் ஒன்று இந்தியாவின் ஹைதராபாத் நகருக்கு இயக்கப்பட்டது.
இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டலையடுத்து அவ்விமானம் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
பிற்பகல் 12.30 மணியளவில் 6E 058 என்ற அவ்விமானம் சர்தார் வல்லபாய் பட்டேல் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
பின்னர் அதனை முழுமையாகச் சோதிக்கும் வகையில், அதிலிருந்த 180 பயணிகளும் ஆறு ஊழியர்களும் வெளியேற்றப்பட்டதாகக் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அதுல் பன்சால் கூறினார்.
“மதினாவிலிருந்து ஹைதராபாத் நோக்கி அவ்விமானம் வந்துகொண்டிருந்த நிலையில், அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் வந்தது. அந்த நேரத்தில், அகமதாபாத் விமான நிலையம் அருகில் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை அங்கேயே தரையிறக்க விமானி முடிவுசெய்தார்,” என்று திரு பன்சால் விளக்கினார்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் கிடைத்ததும் உள்ளூர்க் காவல்துறையினரும் விமான நிலையத்திற்கு விரைந்தனர். மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையினருக்கும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கும் அவர்கள் உதவினர்.
முதற்கட்டச் சோதனையில் சந்தேகப்படும்படியாக விமானத்தில் எதுவும் கண்டறியப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இண்டிகோ விமானம் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்துவரும் நிலையில், அதன் விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, ஷார்ஜாவிலிருந்து ஹைதராபாத் சென்ற இண்டிகோ விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அவ்விமானம் மும்பைக்குத் திருப்பிவிடப்பட்டது.

