இண்டிகோ சேவை முடக்கம்: கட்டண உயர்வை அனுமதித்தது ஏன்? - டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

2 mins read
84808f27-9e00-4f6f-b167-37bbb988c088
விமான நிலையங்களில் உள்நாட்டுப் பயணங்களுக்கான கட்டணம் பன்மடங்காக ஆனது. - படம்: டைம்ஸ் ஆப் இந்தியா

புதுடெல்லி: இண்டிகோ விமானச் சேவை முடங்கியதைப் பயன்படுத்தி, பிற விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியதைத் தடுக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) புதிய பணி நேர விதிகள் (FDTL) அமலாக்கம் காரணமாக, கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் இண்டிகோ விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

மத்திய அரசின் தலையீட்டிற்குப் பிறகும், தொடர்ந்து 11வது நாளாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்தச் சூழலில், விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் குழப்பம் குறித்து நீதி விசாரணை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடிலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை (டிசம்பர் 10) விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலை நோக்கி நீதிபதிகள், “இண்டிகோ சேவை முடங்கியபோது, மற்ற நிறுவனங்கள் இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தது எப்படி? இதற்கு யார் பொறுப்பு?

“டெல்லி-மும்பை, டெல்லி-பெங்களூரு, டெல்லி-சென்னை போன்ற முக்கிய வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் ரூ.39,000 வரை பல மடங்கு உயர்ந்தது எப்படி?

“விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் அவதி ஒருபுறம் இருக்க, அவர்களுக்கு ஏற்பட்ட பெரும் பொருளாதார இழப்பை ஈடுசெய்வது யார்? கட்டண உயர்வைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?” என்று சரமாரியாக கேள்வி கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் ஷர்மா, “இந்த விவகாரம் தொடர்பாக இண்டிகோ நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கட்டண உயர்வைத் தடுக்க உடனடியாகக் கட்டண உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது. விமான நிறுவனங்களின் தன்னிச்சையான கட்டண உயர்வுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த சம்பவம், பண்டிகை காலங்களில் திடீரென ஏற்படும் விமானக் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துயுள்ளது.

குறிப்புச் சொற்கள்