ஒரேயொரு பயணப்பையுடன் பறக்கும் பயணிகளுக்கு இண்டிகோவின் சலுகைக் கட்டணம்

ஒரேயொரு பயணப்பையுடன் பறக்கும் பயணிகளுக்கு இண்டிகோவின் சலுகைக் கட்டணம்

கோப்புப் படம்: கோன்டே நாஸ்ட் டிராவலர்

02 Jul 2026 - 6:47 pm

2 mins read

புதுடெல்லி: அதிக பயணப் பைகள், உடைமைகளைக் கொண்டுசெல்லாமல் வெறும் கைப்பையுடன் மட்டும் பயணம் மேற்கொள்வதற்குப் புதிய சலுகைக் கட்டண முறையை அறிவித்துள்ளது இண்டிகோ விமான நிறுவனம்.

தனது உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களில் சாதாரண (எகானமி) வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும் என இண்டிகோ அறிவித்துள்ளது.

‘இண்டிகோ லைட்’ (IndiGo Lite) என்ற இந்தப் புதிய திட்டத்தின்கீழ், மற்ற அனைத்துக் கட்டணப் பிரிவுகளைவிட மிகக் குறைந்த விலையில் பயணச்சீட்டு விற்கப்படுமென இண்டிகோ கூறியுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்வோர், அதிகபட்சமாக ஏழு கிலோ எடை கொண்ட, விமான இருக்கைக்கு மேலே வைக்கக்கூடிய ஒரேயொரு பையை (கேபின் பேக்கேஜ்) மட்டுமே எடுத்துச் செல்லலாம்.

எந்தவொரு கூடுதல் கட்டணமுமின்றி பயணிகளுக்குத் தானியங்கி முறையில் இருக்கைகள் ஒதுக்கப்படும் என இண்டிகோ தலைமை உத்தி அதிகாரி அலோக்சிங் தெரிவித்தார்.

பயணிகள் பலர் குறைந்த எடையுடன் பயணம் செய்ய விரும்புகிறார்கள் என்றும் அத்தகைய பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் தேவைகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும் என்றும் திரு அலோக்சிங் குறிப்பிட்டுள்ளார். இதற்கேற்ற வகையில் ‘இண்டிகோ லைட்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இதேபோன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இண்டிகோ நிறுவனமும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ நாள்தோறும் 2,100 விமானங்களை இயக்குகிறது.

இந்தப் புதிய திட்டம் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விரைவாகச் செயல்படுவதில் இண்டிகோ நிறுவனத்தின் திறனை பிரதிபலிப்பதோடு தங்கள் வாடிக்கையாளர்களின் பயணத்தை மேலும் எளிதாகவும் மலிவாகவும் மாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது என்றும் திரு அலோக்சிங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்