புதுடெல்லி: சிறார் உள்ளிட்ட அனைவர்க்கும் இணைய வசதி கிடைப்பதும் அவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதும் அடிப்படை உரிமையாகும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வயது அடிப்படையில், சிறார் இணையத்தைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதே வேளையில், சிறுவர்களை இணையவழிப் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான கடுமையான விதிமுறைகளை வகுக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் காணப்படும் குழந்தைகள் தொடர்பான பாலியல் உள்ளடக்கங்களைக் கண்டறிந்து, அவற்றை அகற்றுவதும் அதில் உள்ளடங்கும்.
சிறுவர்களின் பாதுகாப்பும் இணையத்தைப் பயன்படுத்தும் சுதந்திரமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். அவர்களுக்கு இணைய உரிமையை முற்றிலுமாக மறுப்பது நியாயமற்றது என்றும் அவர்களின் உரிமைகளைப் பறிக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் சுட்டினர்.
வயதுக் கட்டுப்பாடுகள் சிறாரைக் கட்டுப்பாடற்ற, ஆபத்தான இணையத்தளங்களை நோக்கித் தள்ளக்கூடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இணையம் வழியாக அச்சுறுத்தப்படும் சிறார், தண்டனைக்கு அஞ்சி அதுபற்றிப் பெற்றோரிடம் அல்லது தங்களுக்குத் தெரிந்த, நம்பகமான பெரியவர்களிடம் கூறத் தயங்குவர் என்றும் அது குறிப்பிட்டது.
18 வயதுக்குட்பட்டோர் இணையத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த சில வாரங்களில் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இணையத்தில் குழந்தைகளை ஈடுபடுத்திய பாலியல் உள்ளடக்கங்கள் பரவுவதைத் தடுக்கத் தவறியதற்காக ஒழுங்குமுறை அதிகாரிகளையும் சமூக ஊடகத்தளங்களையும் உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.
அத்தகைய உள்ளடக்கங்களைக் கண்டறிந்து அகற்ற, தேசியத் தரவுத்தள வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்படி இந்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தவறான உள்ளடக்க நீக்கங்களைத் தவிர்க்க பலகட்டச் சரிபார்ப்புகளும் குறைதீர்ப்பு வழிமுறைகளும் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தொடக்கப் பள்ளி நிலையிலிருந்தே இணையத் தீங்குகள், ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வுத் திட்டங்களைத் தொடங்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, 16 வயதிற்குட்பட்ட சிறார் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆந்திர மாநில அமைச்சர் நர லோகேஷ் இவ்வாண்டுத் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார். அத்தகைய தடையை ஆஸ்திரேலியா நடைமுறைப்படுத்தியதைத் தொடர்ந்து, அமைச்சரின் அறிவிப்பு வெளியானது.
