சென்னை: இந்தியாவில் வெளியுறவு அமைச்சின் வாயிலாக ஆண்டுதோறும் 1.5 கோடிப் பேருக்குக் கடப்பிதழ் வழங்கப்படுகிறது.
வெளியுறவு அமைச்சின் தலைமைக் கடப்பிதழ் அதிகாரியும் கடப்பிதழ் சேவைத் திட்ட இணைச் செயலாளருமான முபாரக் இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவில், 452வது அஞ்சல் அலுவலகக் கடப்பிதழ் சேவை மையம், கோவை மாவட்டம் பொள்ளாச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) திறந்து வைக்கப்பட்டது.
இதில், பங்கேற்ற தலைமை கடப்பிதழ் அதிகாரி முபாரக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இந்தியாவில், அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் கடப்பிதழ் சேவை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 452 கடப்பிதழ் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
“32 மக்களவைத் தொகுதிகளில் கடப்பிதழ் சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 1.5 கோடி (15 மில்லியன்) பேருக்குக் கடப்பிதழ் வழங்கப்படுகிறது.
“கடந்த மே மாதம் முதல் மின்கடப்பிதழ் நடைமுறைக்கு வந்துள்ளது.
“அதில் ஒரு ‘மின்னணுச் சில்லு’ பொருத்தப்பட்டிருக்கும். அதன் வாயிலாக, கடப்பிதழ் வைத்திருப்பவரின் தனிப்பட்ட மற்றும் ‘பயோமெட்ரிக்’ அடையாளங்கள் சேமித்து வைக்கப்படுகின்றன. இதன் வாயிலாக பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடிகிறது,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“அந்த கணினிச் சில்லில் மின்னிலக்கக் கையொப்பத்துடன் தகவல்கள் இருக்கும். அதைத் திருத்தவோ போலிக் கடப்பிதழ்களை உருவாக்கவோ முடியாது. கடப்பிதழ் சேவைத் திட்டம் நடப்பாண்டு முதல் 2ஆம் பதிப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, விரைவு, பாதுகாப்பு என உலகத்தில் உள்ள 202 துாதரகத்திலும் இந்தச் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது,” என்று திரு முபாரக் தெரிவித்தார்.

