மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ளது. இதற்காக மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் காளைகளுக்குத் தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்வதே பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுவதால், காளைகள் களத்தில் நின்று விளையாடவும் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் தப்பிக்கவும் உரிமையாளர்கள் சிறப்புப் பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
போட்டிகளில் நின்று விளையாடுவதற்கும் திமில்களைப் பிடித்து அடக்கப் பாயும் மாடுபிடி வீரர்களை நெருங்கவிடாமல் இருப்பதற்கும் காளைகளுக்குச் சிறப்புப் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
மணல் மேடுகளைக் கொம்புகளால் குத்துதல், நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி ஆகியவை காளைகளுக்கு வழங்கப்படுகின்றன.
காளைகள் உடல் வலிமையுடன் இருக்கப் பருத்திக் கொட்டை, நீரில் ஊறிய உளுந்து தோல், துவரம் பருப்பு ஆகியவை உணவாக வழங்கப்படுகின்றன.
களத்தில் காளைக்கு மூச்சு வாங்காமல் இருக்க ‘தலைச்சுருளி’ வேரும், தேகக்கட்டுடன் இருக்க ‘குமுட்டிக்காய்’ போன்ற மூலிகைகளும் அரைத்துக் கொடுக்கப்படுகின்றன.
விவசாயிகள், அரசியல் கட்சியினர், முக்கியப் பிரமுகர்கள் காளைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாகப் பெண்களும் ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடி வீரர்களை விரட்டி அடிக்கவும் மிரட்டி துரத்தவும் காளைகள் தயாராகி வருகின்றன. நடப்பாண்டில் காளைகளைக் களமிறக்கும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்துப் பேசிய கால்நடை மருத்துவர் மெரில்ராஜ், “சிறிய கன்றுக்குட்டிகளாக இருக்கும்போதே வாங்கி, பயிற்சி அளிக்கின்றனர். வாடிவாசலில் காளைகள் விளையாடும் திறனைப் பொறுத்தே சந்தையில் அவற்றின் விலை ரூ.50 ஆயிரம் முதல் பல லட்சம் வரை நிர்ணயிக்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.
காளைகளுக்காக நாளொன்றுக்கு 500 ரூபாய்க்கு மேல் செலவு செய்வதாகவும் அது தங்கள் வீட்டுப் பிள்ளை என்றும் உணர்ச்சி பொங்கக் கூறுகின்றனர் அன்றாடம் கூலி வேலை செய்வோர்.
சட்டப்பேரவைத் தோ்தல் நடைமுறைகள் ஜல்லிக்கட்டின் விறுவிறுப்பைத் தடுக்குமோ என்ற அச்சமும் காளை வளா்ப்பாளா்களிடம் இருக்கிறது.
வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்படும். முதல்வா் பெயரில், துணை முதல்வா் பெயரில், முன்னாள் முதல்வா் பெயரில் காளைகள் அவிழ்த்துவிடப்படுவதும் அவற்றைத் தழுவுவோருக்கு பெரிய பரிசுகள் அறிவிக்கப்படுவதும் இயல்பு.
ஏராளமான பாத்திரங்கள், மின்விசிறிகள், வீட்டு உபயோகப் பொருள்கள், தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வரை இந்தப் பரிசுப் பொருள்கள் இருக்கும். திடீா் திடீரென ரொக்கப் பரிசுகளும் வாரி வழங்கப்படுவதும் வாடிக்கை.
இதனால்தான் தோ்தல் ஆணையம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பரிசுகள் வழங்கப்படுவதற்கான விதிகளை நெருக்குகிறது. பரிசுகள் தாராளமாக இல்லாவிட்டால், காளை வளா்ப்பாளா்கள் போட்டியில் பங்கேற்பதை விரும்புவதில்லை.
“பெரும்பாலும் பரிசுப் பொருள்களை கௌரவமாகத்தான் பாா்க்கிறோமே தவிர, பண்ணையில், வீட்டில் அவற்றை அடுக்கித்தான் வைத்திருப்போம். அதைப் பயன்படுத்துவதுகூட இல்லை. ஆனாலும், பரிசுகள் முக்கியமானவை,” என்கிறாா் புதுக்கோட்டையைச் சோ்ந்த காளை வளா்ப்பவர்.
தலைமுறைகளைக் கடந்து காளைகளை வளர்ப்பதாக கூறும் மதுரை மாவட்ட மக்கள், காளைகளை தங்கள் குலதெய்வமாக பார்ப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

