சென்னை: இந்திய இளைஞர்களுக்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் விசா வழங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கான ஜப்பான் துணைத் தூதர் தகாஹாஷி முனியோ தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள தனியாா் விடுதி ஒன்றில் இந்தோ - ஜப்பான் தொழில் வர்த்தகச் சபையின் ஜப்பானிய மொழி பள்ளி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளின் பரிசளிப்பு விழா நடந்தது.
அக்டோபர் 13ஆம் தேதி அந்நிகழ்ச்சியில் பேசிய திரு தகாஹாஷி இவ்வாறு கூறினார்.
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பானியப் பிரதமர் இஷிபாஷி ஷிகெருவும் அண்மையில் நடைபெற்ற உச்சிமாநாட்டில், சந்தித்துச் பேசினர். அப்போது பொருளியல், தொழில்நுட்பத் துறை, கல்வி, பண்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை எடுத்துக் கொண்டனர்,” என்றார் அவர்.
மேலும் தூய்மையான எரிசக்தி,செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் கூட்டு ஆராய்ச்சிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட அவர்கள் முடிவெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்தியா - ஜப்பான் இடையேயான மனிதவளப் பரிமாற்றம் ஒத்துழைப்புக்கான செயல் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக, அடுத்த ஐந்தாண்டுகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியப் பணியாளர்கள், மாணவா்களுக்கு விசா வழங்கப்படவுள்ளது.
“ஜப்பானில் உள்ள உலகத் தரம் வாய்ந்த தொழில் துறைகளில் பணியாற்றவும் மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்களைப் பெறவும் இந்தியாவிலிருந்து 50 ஆயிரம் திறனாளர்களுக்கும் இளம் தொழில் வல்லுநர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது,” என்றும் அவர் கூறினார்.