ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்: ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி

ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்: ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி

2 mins read
66660811-8722-4836-ae33-f39fde99f9bb
விரைவு அதிரடிப்படை, இந்திய ரிசர்வ் படை, மாவட்ட காவல்துறை உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், போராட்டத்தை முன்னெடுத்துவரும் மாணவர் அமைப்பினருக்கும் அரசுக்கும் இடையேயான ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

மேலும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் அம்மாநில சட்டமன்றத்தை நோக்கி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) பேரணியாகச் சென்றனர்.

போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஜேஎல்கேஎம் அமைப்பின் தலைவர் தேவேந்திரநாத் மஹதோ மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அவரது உடல் எடை 10.5 கிலோ குறைந்துவிட்டது.

மேலும், ‘ஆம்புலன்ஸ்’ வாகனத்தில் அமர்ந்தபடி அவர் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார்.

பேரணி காரணமாக ஜார்க்கண்ட சட்டமன்ற வளாகத்தில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மாணவர்கள் பேரணியாகச் சென்ற நான்கு கிலோ மீட்டர் தூரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விரைவு அதிரடிப்படை, இந்திய ரிசர்வ் படை, மாவட்ட காவல்துறை உள்ளிட்ட 1,500 பேருக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், போராட்டத்துக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக மாணவர் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதையடுத்து, அரசுத் துறை தேர்​வு​களில் வெளிப்​படைத்​தன்​மையை உறுதி செய்ய வேண்​டும், தேர்வு முறை​கேடு​களைத் தடுக்க வேண்​டும், வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாணவர்​கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரு​கின்​றனர்.

இந்நிலையில், மாநில அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், இளையர்​களின் எதிர்​காலத்​தைப் பாதிக்​கும் வகையி​லான கொள்​கைகளை மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்​டும் என்றும் மாணவர்​களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்​டும் என்றும் மாணவர்​களின் இந்த அறப்போராட்டத்துக்கு காங்​கிரஸ் கட்சி எப்​போதும் துணை​யாக இருக்​கும் என்றும் திரு மல்லிகார்ஜுன கார்கே தெரி​வித்​துள்​ளார்.

மாணவர் அமைப்புடன் ஜார்க்கண்ட் அமைச்சர் சுதிவ்யா குமார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தபோதிலும் தேர்வுகள் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் மூவரும் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

இதனிடையே, ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட மாணவர் போராட்டங்களை அமைதி வழியில் முடிவுக்குக் கொண்டுவர, மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மீறிவிட்டதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

மாணவர் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது பதிவான வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக அதிகாரிகள் உடன்பாடு எட்டியிருந்தனர். ஆனால், அந்த உடன்பாட்டை மீறி, மாணவர்கள் மீது காவல்துறை இன்னமும் சட்ட நடவடிக்கைகளையும் விசாரணைகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறது என சிஜேபி செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா கவலை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்