சென்னை: பணி நியமனங்களில் 634 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனின் உதவியாளர் கவி பிரசாத்தை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் கைது செய்தனர்.
முந்தைய திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியிடங்களை நிரப்பியதில் லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத் துறை அளித்த தகவலின் பேரில், நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான சீராய்வு, மேல்முறையீட்டு மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்ததை அடுத்து விசாரணை தீவிரமடைந்தது.
ஏற்கெனவே, அக்டோபர் 29ஆம் தேதி நேரு தொடர்புடைய இடங்கள் உட்பட 25 இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்களும் மின்னணுச் சாதனங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் வெளிநாடு செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்ட கவி பிரசாத், கூடுதல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
