பெங்களூரு: மாரடைப்பு மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கர்நாடகாவின் ஹாசன் மாவட்ட மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இதையடுத்து, மாரடைப்பு மரணம் குறித்து விசாரிக்க சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது அம்மாநில அரசு.
ஹாசன் மாவட்டத்தில், கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை, 18 பேர் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 29) மேலும் நான்கு பேர் மாரடைப்பால் மாண்டதையடுத்து, இந்த எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விதமான காரணங்கள் குறித்து பேச்சுக்கள் எழுந்தன. சமூக ஊடகங்களிலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, இளையர்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்கப்படுவதாக வெளியான தகவல் பரபரப்பை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, மாரடைப்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு ‘ஸ்டெமி’ சிகிச்சை அளிக்க கர்நாடகாவின் 86 தாலுகா மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில பாஜக எம்பி மஞ்சுநாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் நட்டா, மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் ஆகியோருடன் தாம் ஆலோசனை நடத்தி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“மாரடைப்பில் இருந்து விரைவாக மீண்டு வரவும் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கவும் இதய தசைகளுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்கவும் புதிய சிகிச்சை முறை கைகொடுக்கும்,” என்று மருத்துவருமான மஞ்சுநாத் மேலும் தெரிவித்தார்.

