கர்நாடக பாலியல் வன்கொடுமை: அமைச்சர் கருத்தால் சர்ச்சை

2 mins read
d3656821-8816-46a7-ab73-08ff509591d4
செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, இந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். - படம்: ஊடகம்

பெங்களூரு: பாலியல் சம்பவங்கள் தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது.

பெங்களூரு போன்ற ஒரு பெரிய நகரத்தில் பாலியல் சம்பவங்கள் அங்கும் இங்கும் நடக்கத்தான் செய்யும் என்று அவர் கூறியிருந்தார்.

அண்மையில் பெங்களூருவில் அதிகாலை வேளையில் இரண்டு பெண்கள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர்களைப் பின் தொடர்ந்து வந்த ஆடவர், ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

இதையடுத்து இணையவாசிகள் பலரும் சமூக ஊடகங்களில் அரசையும் காவல்துறையையும் கடுமையாக விமர்சித்தனர்.

பெங்களூருவில் பெண்கள் நடமாட இயலாத சூழல் நிலவுவதாக கருத்துக்களைப் பதிவிட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

“பெங்களூரு பெரிய நகரம். எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். அது பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கிறது.

“சுற்றுக்காவல், கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு காவல் ஆணையரைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மழை, குளிரைப் பொருட்படுத்தாமல் காவல்துறையினர் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதனால்தான் பெங்களூருவில் அமைதி நிலவுகிறது” என்றும் அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, பெங்களூர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கேட்டபோது, முந்திய பாஜக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் நடக்கவில்லையா? பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சமூகத்தில் எப்போதும் கெட்டவர்களும் உள்ளனர்,” என்று கூறியது கடும் கண்டனத்துக்கு ஆளானது.

முதல்வரை அடுத்து உள்துறை அமைச்சரும் அதேபோன்ற சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்