திருவனந்தபுரம்: கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில் எதிர்த்தரப்பு காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலையிலும் வெற்றிபெறும் நிலையிலும் இருந்தது.
மாலைநேர நிலவரப்படி, ஆளும் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி பெரும்பாலான இடங்களில் பின்னடைவைச் சந்தித்தது. அதேநேரம், திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி முதன்முறை கைப்பற்றும் நிலையில் முடிவுகள் இருந்தன.
கேரள சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த மாதம் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை (டிசம்பர் 13) காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்தது.
ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் போட்டியிட்ட இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி பின்னடைவைச் சந்தித்தது.
மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4ல் முன்னிலை வகித்தது. கண்ணூர், எர்ணாகுளம், கொல்லம், திருச்சூர் ஆகிய மாநகராட்சிகள் அவை.
ஆளும் இடதுசாரி கூட்டணி கோழிக்கோடு மாநகராட்சியில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல, திருவனந்தபுரம் மேயர் பதவியை பாஜக தன்வசப்படுத்தும் நிலையில் இருந்தது. அந்த மாநகராட்சியில் மொத்தம் உள்ள 101 வார்டுகளில் பாஜக கூட்டணி 55 இடங்களில் முன்னிலை வகித்தது.
வாக்களிப்பு நடைபெற்ற 941 கிராம பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கூட்டணி 439 இடங்களிலும் இடதுசாரி கூட்டணி 373 இடங்களிலும் பாஜக கூட்டணி 23 இடங்களிலும் முன்னிலை வகித்தன.
தொடர்புடைய செய்திகள்
மொத்தமுள்ள 152 வட்டார ஊராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 81 இடங்களிலும் இடதுசாரி கூட்டணி 63 இடங்களிலும் முன்னிலை வகித்தன.
14 மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களிலும் இடதுசாரி கூட்டணி 6 இடங்களிலும் முன்னிலை வகித்தன.
87 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 55 இடங்களிலும் இடதுசாரி கூட்டணி 28 இடங்களிலும் பாஜக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை வகித்தன.
இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது.

