திருச்சூர்: திருச்சூர் அருகே நாட்டிகை என்னும் பகுதியில் நெடுஞ்சாலைப் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில் சாலையோரமாகத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
சாலையோரத் தடுப்பு அமைக்கப்பட்டிருந்த பகுதியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கட்டுமான ஊழியர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலையில், அப்பகுதியில் வந்த சரக்கு வாகனம் ஒன்று, அங்கிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதால் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால்தான் இந்த விபத்து நேர்ந்தது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த ஓட்டுநரையும் அவரது உதவியாளரையும் காவலர்கள் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

